வேதாரண்யம், கோடியக்கரை கடலில் மக்கள் நீராடல்; முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை மற்றும் பூம்புகார் கடலில் ஆடி அமாவாசையையொட்டி, புனித நீராடிய மக்கள், தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்ப்பணம்) செய்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை மற்றும் பூம்புகார் கடலில் ஆடி அமாவாசையையொட்டி, புனித நீராடிய மக்கள், தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்ப்பணம்) செய்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனர்.
ஆடி அமாவாசையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி நீராடல் நடைபெற்றது. கோடியக்கரை கடல் முழுக்குத்துறையில் நீராடிய மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள், அங்குள்ள சித்தர் பீடம், ராமர் பாதம் ஆகிய இடங்களில் வழிபட்டனர்.
இதேபோல், வேதாரண்யம் சன்னதிக் கடல் பகுதியிலும் மக்கள் நீராடி வழிபட்டனர். தொடர்ந்து, வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிக்கர்ணிகை எனும் புனித தீர்த்தக்குளம், வேதாமிர்த ஏரி ஆகிய இடங்களிலும் நீராடி இறைவனை வழிபட்டனர்.
பல்வேறு சேவை அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
பூம்புகாரில்... ஆடி அமாவாசையையொட்டி, காவிரி கடலோடு கலக்கும் இடமான பூம்புகார் சங்கமத்துறையில் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர். தங்களது மூதாதையர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து, சங்கமத்துறையில் புனித நீராடி வழிபட்டனர்.
இதையொட்டி, பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் மேள, தாளத்துடன் புறப்பாடாகி காவிரி கடலோடு கலக்கும் இடமான சங்கமத்துறையில் தீர்த்தவாரி செய்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர்கள் சிங்காரவேலன், மணிமாறன் தலைமையிலான போலீஸார் செய்திருந்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூம்புகாருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com