சென்னை மாநகர குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: ஸ்டாலின்

சென்னை மாநகர குடிநீர் பிரச்னைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகர குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: ஸ்டாலின்

சென்னை மாநகர குடிநீர் பிரச்னைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:' சென்னை மாநகரம் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தைச் சந்தித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மாதக்கணக்கில் குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. சில பகுதிகளில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதாக புகார்கள் வருகின்றன.
அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, 16.4.2013 அன்று நெம்மேலியில் ரூ.1371 கோடி மதிப்பில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல, சென்னை அருகில் போரூரில் ரூ.4,070 கோடி மதிப்பில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இரு திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஆந்திர மாநில அரசுடன் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சென்னை மாநகருக்குக் கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரையும் பெறமுடியவில்லை.
சென்னை மாநகருக்கு குடிநீர் தரும் ஏரிகளை ஆழப்படுத்தி, மழை வெள்ளத்தில் கடலில் கலந்த வெள்ளநீரை சேமித்து வைக்கவும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் சென்னை மாநகர மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
இந்நிலையில், அதிமுக அரசு 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
ஆனால், இப்போது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சி.ஏ.ஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் குதிரைமொழி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தூத்துக்குடி ஆழந்தலை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகிய இரு திட்டங்களுக்காகவும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி செலவழிக்கப்படாமல் சரண்டர் செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு ஆந்திர முதல்வரைச் சந்தித்து , சென்னை மாநகருக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண, லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்வதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com