தனியாரிடம் பயிர்க் காப்பீடு தவிப்பில் விவசாயிகள்!

ஒரே தேசம், ஒரே திட்டம் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா எனும் புதிய பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள
தனியாரிடம் பயிர்க் காப்பீடு தவிப்பில் விவசாயிகள்!

ஒரே தேசம், ஒரே திட்டம் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா எனும் புதிய பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியால் இழப்பீடு பெறுவதில் விவசாயிகள் பெரிதும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2016 பிப்ரவரி மாதம் இத்திட்டத்தை ரூ.17,500 கோடி மதிப்பில் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. ஆனால், இந்த புதிய திட்டம் அதுபோல இல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையாக கைகொடுக்கும் என்றார். ஆனால், பிரதமரின் இந்த புதிய திட்டத்தை சிதைக்கும் வகையில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
காப்பீட்டு கட்டணம் எவ்வளவு?: இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி, காரிப் பருவப் பயிர்களுக்கு 2 சதவீதம், ரபி பருவப் பயிர்களுக்கு 1.5 சதவீதம் என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும். ஆண்டுப் பயிர்களான பணப் பயிர்கள், தோட்டடக் கலைப் பயிர்கள் ஆகியவற்றுக்கு 5 சதவீதம் காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும்.
அறிவிப்புகள் என்ன?: அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்புகளுக்கும் சேர்த்து காப்பீடு செய்ய முடியும். தண்ணீரில் மூழ்கிய பயிர்களுக்கும் இழப்பீடு உண்டு. ஏற்கெனவே இருந்த தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் ‘புயல் பாதிப்பு இழப்பீடு’ கடலோர மாவட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், புதிய திட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் புயல் பாதிப்பு இழப்பீடு வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் இழப்பீடு பெற, விவசாயிகள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், புதிய திட்டத்தில் 30 முதல் 45 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும். விதைப்புக்கும் அறுவடைக்கும் இடைப்பட்ட காலத்தில் காற்று, பூச்சி, நோய்த்தாக்குதலால் பயிர்களில் ஏதேனும் பாதிப்புகள் நேர்ந்தால், மொத்தக் காப்பீட்டுத் தொகையில் 25 சதவிகிதம் அப்போதே வழங்கப்படும் கிடைக்கும் என அறிவிக்கப்ட்டது. ஆனால், இந்த அறிவிப்புகளை தனியார் நிறுவனங்கள் மெத்தனமாகவே செயல்படுத்தி வருகின்றன.
நிறுவனங்கள் என்ன?: அகில இந்திய அளவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 18 நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இதில், 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளன. தமிழகத்தில் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, சோழமண்டலம், இப்கோ, பஜாஜ், ரிலையன்ஸ், ப்யூச்சர் ஜெனரலி, டாடா ஏஐஜி, எஸ்பிஐ, யூனிவர்சல் சாம்போ ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலை என்ன?: தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சென்னையத் தவிர்த்து இதர மாவட்டங்களை 3 கூட்டமைப்பாக பிரித்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம், திருவாரூர், நாம்ககல், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்கள் கூட்டமைப்பு 1இல் இடம்பெற்றுள்ளன.
2ஆம் கூட்டமைப்பில் சிவகங்கை, கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், நீலகிரி, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களும், 3ஆவது கூட்டமைப்பில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
இதில், முதலாவது கூட்டமைப்பு மாவட்டங்களில் புதிய பயிர்க்காப்பீடானது பொதுத்துறை நிறுவனமான அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் இந்தியா நிறுவனத்திடம் 2016-19 வரை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, இரண்டாவது கூட்டமைப்பில் உள்ள 10 மாவட்டங்கள் ஐசிஐசிஐ, சோழமண்டலம் நிறுவனங்கள் வசமும், மூன்றாவது கூட்டமைப்பு மாவட்டங்கள் மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் பங்களிப்பு: விவசாயிகள் செலுத்தும் தொகைக்கு ஈடாக அதே அளவு தொகையை மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் அளவில் செலுத்தி வருகின்றன. இதில், 2016ஆம் ஆண்டின் காரிப் பருவத்துக்கு மட்டும் தமிழக அரசு ரூ.487.37 கோடி வழங்கியுள்ளது. ராபி பருவத்துக்கு ரூ.193.88 கோடி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளதால் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் தங்களது பங்களிப்பை அளித்த பிறகும் அதனைப் பெற்றுக் கொண்ட தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு தொகையை விடுவிக்க காலதாமதம் செய்து வருகின்றன.
இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார் கூறியது:
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.3 கோடி பிரிமீயம் செலுத்தியுள்ளனர். தனியார் நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் மட்டும் 6 லட்சம் விவசாயிகளிடம் ரூ.400 கோடிக்கு மேல் பிரிமீயம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், 4 மாதங்களாக இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றன. நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.23,500 வழங்க வேண்டும். நாற்றாங்கால் வைத்தவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக ரூ.5,500 வழங்குகிறோம் என்கின்றனர். அந்தத் தொகையும் இன்னும் வந்தபாடில்லை. அரசுகள் வழங்கிய கோடிக்கணக்கான தொகை, விவசாயிகள் செலுத்திய கோடிக்கணக்கான தொகைக்கு 4 மாதம் வட்டி கணக்கிட்டாலே தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி வரவில் வந்துவிடும். ஆனால், இன்னும் இழப்பீடு வழங்க தாமதம் செய்துவருகின்றனர். பயிர்க் காப்பீட்டில் தனியார்மயத்தை அனுமதித்த காரணத்தினாலேயே இத்தகைய நிலை எழுந்துள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகளே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com