முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக அம்மா அணியில் இணைந்தார் எம்எல்ஏ ஆறுக்குட்டி

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியில் இருந்து விலகிய கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, சேலத்தில் தமிழக முதல்வர்
சேலத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கி அவரது முன்னிலையில் இணைந்த கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி.
சேலத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கி அவரது முன்னிலையில் இணைந்த கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியில் இருந்து விலகிய கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுக அம்மா அணியில் இணைந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அரசு பொருட்காட்சி தொடக்க விழா, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கபடி போட்டிகளை தொடக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை இரவு சேலம் வந்தார்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து பூங்கொத்து வழங்கிய கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி அதிமுக அம்மா அணியில் இணைந்தார். அப்போது, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் வி.சி.ஆறுக்குட்டி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் இரண்டு அணிகள் உருவானது. அதில் முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து பணியாற்றி கொண்டிருந்தேன்.
இரு அணிகளும் ஒன்றுபட தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். தற்போது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்.
கோவையில் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக என்னை அழைக்காமல் ஆலோசனை நடத்தியதுடன், அதற்காக பூஜையும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தலைமையிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை.
இதனிடையே சட்டப்பேரவைத் தொடரின் போது கவுண்டம்பாளையம் தொகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிதி ஒதுக்கியுள்ளார்.
குறிப்பாக தடாகத்தில் துணை மின் நிலையம் அமைக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கியும், காவல் நிலையம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கியும், அதே பகுதியில் ரூ.2 கோடியில் பாலம் அமைக்கவும், ஆனைகட்டி பகுதியில் பழங்குடியின, ஆதிதிராவிட மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் ரூ.2.5 கோடியில் அமைக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆனைகட்டி பகுதியில் ரூ.1.34 கோடியில் மருத்துவமனை கட்டவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நான் கவுண்டம்பாளையம் தொகுதியில் இரண்டாவது முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளேன். தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.
அந்த வகையில் தொகுதி வளர்ச்சிக்கும், மக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அரசுடன் இணைந்து செயல்பட உள்ளேன்.
என்னை யாரும் அழைக்கவில்லை. அதேபோல யாரும் இழுக்கவில்லை. அதேபோல ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீது எந்த வித குற்றச்சாட்டை வைக்க தயாரில்லை. மேலும் அதிமுக இரண்டு அணியாகப் பிரிந்திருப்பது தொண்டர்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. இரண்டு அணிகளும் இணைவதற்கு பல்வேறு இடையூறுகள் உள்ளன.
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினால் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு இரண்டு அணிகளும் இணைந்துவிடும். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி என்ன முடிவெடுக்கிறாரோ அந்த முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com