முயல் வளர்ப்புத் தொழில் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு

முயல் வளர்ப்புத் தொழில் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு

முயல் ஆராய்ச்சிக்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் 10ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு முயல் வளர்ப்பு தொழில் மூலம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முயல் ஆராய்ச்சிக்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் 10ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு முயல் வளர்ப்பு தொழில் மூலம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல விதமான நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடக் கூடியதும், மருத்துவ குணங்கள் நிறைந்ததுமான முயல் இறைச்சி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அதிக சந்தை வாய்ப்பை பெற்றது. இதன் காரணமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பலர், முயல் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். தமிழகம் மற்றும் கேரளத்தில் மட்டும் சுமார் 500 முயல் பண்ணைகள் செயல்பட்டு வந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முயல் வளர்ப்பு தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்று வந்தனர். இறைச்சி விற்பனை, ரோமத்தின் மூலம் தொப்பி, பணப் பை உள்ளிட்ட பொருள்கள் தயாரிப்பு, முயலின் சாணத்திலிருந்து மண்புழு உரம் தயாரிப்பு என ஆண்டுக்கு ரூ.10 கோடி வர்த்தகம் நடைபெறும் தொழிலாகவும் வளர்ச்சிப் பெற்றது.
பண்ணையாளர்களுக்கு உயர்ரக கலப்பின முயல்களான ஒயிட் ஜெயண்ட், சோவியத் சின்ஜிலா இனங்கள், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்துள்ள மன்னவனூரில் அமைந்துள்ள மத்திய செம்மறி ஆடுகள் ரோம ஆராய்ச்சி மையத்தின் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்படும் கலப்பின முயல்கள், பண்ணையாளர்கள் மட்டுமின்றி, தமிழகம், கேரளம், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள 15 கால்நடைக் கல்லூரிகளுக்கும், அரசு பண்ணைகளுக்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன.
இதனிடையே, கடந்த
2014-ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மற்றும் இன விருத்தி செய்வதற்கும், இறைச்சிக்காக பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதன் எதிரொலியாக மன்னவனூர் ஆராய்ச்சி மையத்திலும், முயல்கள் தொடர்பான ஆராய்ச்சி நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக 1000 முயல்கள் பராமரிக்கப்பட்டு வந்த இடத்தில், அவற்றின் எண்ணிக்கை 200க்கு கீழ் குறைந்தது.
அதே நேரத்தில், கேரளத்திலும் முயல் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால், கடந்த 3 ஆண்டுகளில் 500ஆக இருந்த முயல் பண்ணைகளின் எண்ணிக்கை 10ஆக குறைந்துவிட்டது. இதனால் சுமார் 10ஆயிரம் பேர் வேலைவாய்ப்பினை இழந்தனர். 3 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.20 கோடி வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், முயல் ஆராய்ச்சிக்கான தடையை நீக்கக் கோரி, விவசாயிகள் தரப்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில், முயல் ஆராய்ச்சிக்கான தடை நீக்கப்பட்டு, முயல் இன விருத்தி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் மன்னவனூரில் ஜூலை முதல் வாரத்திலிருந்து தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே சாப்பிடக் கூடிய விலங்குகள் பட்டியலில் முயல் இணைக்கப்பட்டு கேரளத்தில் தடை நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசும் ஆராய்ச்சிக்கான தடையை நீக்கியிருப்பது பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடை நீக்கம் குறித்து மத்திய செம்மறி ஆடுகள் ரோம ஆராய்ச்சி நிலையத்தின் (மன்னவனூர்) தலைவரும், முதன்மை விஞ்ஞானியுமான ஏ.எஸ்.ராஜேந்திரன் கூறியதாவது:
முயல் ஆராய்ச்சிக்கான தடையை நீக்கி மத்திய வேளாண் அமைச்சகம் கடந்த ஜூலை 3ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து ஒயிட் ஜெயண்ட் மற்றும் சோவியத் சின்ஜிலா ஆகிய கலப்பின முயல்கள் இன விருத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 3 மாதங்களில் முயல் குட்டிகள் விற்பனை தொடங்கும். இந்த வகை முயல் இனங்கள், மாதம் ஒருமுறை 10 முதல் 14 குட்டிகள் ஈனுகின்றன. பால் கிடைக்காமலும், பராமரிப்பு குறைபாடுகளாலும் குட்டிகளின் இறப்பு சதவீதம் 25 ஆக இருந்தாலும் பண்ணையாளர்களுக்கு பாதிப்பு கிடையாது. ஆனால், தற்போது வரை 10 சதவீதம் மட்டும் குட்டிகளின் இறப்பு விகிதம் உள்ளது. பிறந்த குட்டி 50 கிராம் எடை கொண்டதாக இருந்தாலும் ஒரு மாதத்தில் 1 கிலோவாக உயரும். 3 மாதங்களில் சராசரியாக 5 கிலோ எடை இருக்கும். இதனால் முயல் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு அதிக வருமானம் கிடைத்ததால், இத்தொழில் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
முயல் இறைச்சி மட்டுமின்றி, அதன் ரோமம் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக (பணப்பை, தொப்பி உள்ளிட்டவை) மாற்றப்படுவதாலும், சாணம் மண்புழு உரம் தயாரிக்க சிறந்த எருவாக பயன்படுவதாலும் பண்ணையாளர்களுக்கு கூடுதல் வருமானம் ஈட்டிக் கொடுக்கிறது. முயல் சாணத்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் (என்பிகே) ஆகிய பேரூட்டச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் சிறந்த உரமாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மாடித் தோட்டங்களில் வளர்க்கப்படும் காய்கறி மற்றும் பழ வகை செடிகளுக்கு சிறிய அளவில் முயல் சாணத்தை பயன்படுத்தினாலும், அதிக உற்பத்தியை பெற முடியும்.
இதுகுறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களை புதிய தொழில்முனைவோர்களாக உருவாக்கும் முயற்சியிலும் கால்நடைப் பல்கலைக் கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஓராண்டிற்குள் முயல் வளர்ப்புத் தொழில் மூலம் 10ஆயிரும் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என்றார்.

மருத்துவ குணங்கள்

முயல் இறைச்சி ரத்த குழாயில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு உதவுகிறது. அதிக புரதம் கொண்ட இறைச்சியாக உள்ளதோடு, அனைத்து நோயாளிகள் உண்ணும் உணவாகவும் உள்ளது. முயல் மூளையிலிருந்து "த்ராம்போ பிளாஸ்டின்' என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. பாலின உணர்வுகளை தூண்டும் ஆற்றலும் முயல் இறைச்சிக்கு உள்ளது.
முயலின் ரத்தம், கூந்தல் வளர்வதற்கும், கருமை நிறத்திற்கும் பயன்படுவது மேற்கத்திய நாடுகளின் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் டாக்டர் ஏ.எஸ்.ராஜேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com