ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராடுவேன்: விஜயகாந்த்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை மக்களோடு சேர்ந்து நானும் போராடுவேன் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராடுவேன்: விஜயகாந்த்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை மக்களோடு சேர்ந்து நானும் போராடுவேன் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை 103-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, நெடுவாசல் பேருந்து நிறுத்தம் அருகே தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விஜயகாந்த் பேசியது:
ஓஎன்ஜிசி நிறுவனம், வேலைவாய்ப்புகளை அளிப்பதாகக் கூறி உள்ளூர் மக்களை ஏமாற்றி நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தேவையில்லை என்று கடந்த 5 மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய , மாநில அரசுகள் ஏன் இந்தத் திட்டத்தை ரத்து செய்யவில்லை? சமாதானம் செய்து முதல்கட்ட போராட்டத்தை கைவிடச் செய்த அமைச்சர் தற்போது எங்கே போனார்?.
இந்தத் திட்டம் ஒருபோதும் வராது. அமைச்சர், அதிகாரிகளோடு திட்டத்தை நிறைவேற்ற ஊருக்குள் யாரும் வந்தால் உயிரைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்துவேன்.
தொடர்ந்து 6 மாதம் சட்டப்பேரவைக்கு வராத உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்ற விதியைப் பயன்படுத்தி திருவாரூர் தொகுதியை காலியான தொகுதியாக அறிவிக்காமல் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொன்மையான தமிழ்மொழியை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும். கதிராமங்கலம் போன்ற இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அப்பாவி மக்களை போலீஸார் தாக்குவது கண்டனத்துக்குரியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். அதுவரை மக்களோடு நானும் போராடுவேன் என்றார் விஜயகாந்த்.
தொடர்ந்து பிரேமலதா பேசியது:
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில்தான். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியைச் சுற்றியுள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும். திட்டம் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். அதை ஏற்க முடியாது. திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். அதற்கு தேமுதிக துணைநிற்கும் என்றார் அவர்.
தொடர்ந்து, நல்லாண்டார்கொல்லையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றை விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் பார்வையிட்டனர்.
பிறகு விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியது:
வாய்ப்பு கிடைத்தால் மத்திய, மாநில ஆட்சியாளர்களை நேரில் சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்துவோம். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமல்ல, வேறு யார் அரசியலுக்கு வந்தாலும் கவலை இல்லை. ஹிந்தியை கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com