எந்த தனிமனிதனுக்கும் அரசை விமர்சிக்க உரிமை உண்டு: ஓ.பன்னீர்செல்வம்

நடிகர் கமலஹாசனுக்கு மட்டுமல்ல, எந்த தனிமனிதனுக்கும் அரசை விமர்சிப்பதற்கு உரிமை உண்டு என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு செங்கோல் வழங்கிய மைத்ரேயன் எம்.பி.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு செங்கோல் வழங்கிய மைத்ரேயன் எம்.பி.

நடிகர் கமலஹாசனுக்கு மட்டுமல்ல, எந்த தனிமனிதனுக்கும் அரசை விமர்சிப்பதற்கு உரிமை உண்டு என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரம் முத்தியால்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி ரஞ்சித்குமார் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணைக்கு தயார் எனக் கூறிய பிறகும், மாநில அரசு ஏன் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் குடும்ப ஆதிக்கத்தை கட்சிக்குள் அனுமதிக்கவில்லை. இன்று சசிகலா குடும்பத்தின் இரும்புக் கரத்தில் அதிமுக சிக்கியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெற்று வருகிறது.
நடிகர் கமலஹாசனுக்கு மட்டுமல்ல அனைத்து தனி மனிதனுக்கும் அரசை விமர்சிக்க உரிமை உண்டு. புகாருக்கு பதிலளிக்காமல் மிரட்டுவது ஏற்புடையதல்ல. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் தற்போதுள்ள அரசைத் தூற்றும் நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். கட்சியில் இரு பிரிவுகளையும் இணைக்க குழு அமைத்தோம், ஆனால் அதற்கு முன்பாகவே அதிகாரம், பண பலம் காரணமாக அவர்கள் ஆணவத்தோடு பேசினர்.
நான் மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ளேன். பதவியை எதிர்பார்த்தா தர்ம யுத்தத்தைத் தொடங்கினோம். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் எம்ஜிஆருடன் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் எம்.பி. மைத்ரேயன் மற்றும் ஜெய் பாலாஜி, ஜோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com