குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
குடிநீர் தட்டுப்பாடு, நீட் நுழைவுத் தேர்வு, ஹிந்தி திணிப்பு, செம்மொழி ஆய்வகம் மாற்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது, ஜிஎஸ்டி, மீனவர் தாக்கப்படுதல், ஹைட்ரோ -கார்பன், மீத்தேன் எடுக்கும் பிரச்னை என பல்வேறு பிரச்னைகளை தமிழகம் சந்தித்து வருகிறது. இந்த மக்கள் பிரச்னைகளை தீர்க்க முன்வராத மத்திய, மாநில அரசுகள், அடக்குமுறை மூலம் தீர்வுகாண முற்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
போராடுபவர்கள் மீது மிகக் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொள்வது, ஜாமீனில் வரமுடியாத அளவுக்கு வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைப்பது மட்டுமின்றி, குண்டர் சட்டம் மிகத் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது.
நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக நோட்டீஸ் விநியோகம் செய்ததற்காக மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதுடன், பெரியார் பல்கலைக் கழகத்தில் இதழியல் படித்துக் கொண்டிருந்த அவர், பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஜனநாயக விரோத அடக்குமுறைகளைக் கைவிட்டு, மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு முன்வரவேண்டும். வளர்மதி மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதுடன், அவர் படிப்பைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com