கொடுங்கையூர் தீ விபத்தில் பலி 11-ஆக உயர்வு

கொடுங்கையூர் தீ விபத்தில் செல்பி எடுத்த இளைஞர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.


கொடுங்கையூர் தீ விபத்தில் செல்பி எடுத்த இளைஞர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்த விவரம்: சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் பிரதான சாலையில் நித்யானந்தம் என்பவருக்குச் சொந்தமான இரு தளங்களுடன் கூடிய வணிகக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் தரைத் தளத்தில் ஆனந்தன் என்பவர் பேக்கரி நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு அங்கு சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவினால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தின்போது, தீயை அணைக்கச் சென்ற ஏகராஜ் என்ற தீயணைப்புப் படை வீரர் இறந்தார். அதேபோல தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 47 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் கடந்த புதன்கிழமை இரவு முதல் ஒவ்வொருவராக இறக்கத் தொடங்கினர்.
இதன் விளைவாக ஞாயிற்றுக்கிழமை வரை விபத்தில் சிக்கி உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக இருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கொடுங்கையூர் கவிஞர் கண்ணதாசன்நகர் 6-ஆவது செக்டார் பகுதியைச் சேர்ந்த நரேஷ் (28) என்பவர் இறந்தார்.
அதேபோன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொடுங்கையூரைச் சேர்ந்த பார்த்திபன் (24) திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதன் மூலம் கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரில் இன்னும் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
5 பேர் குடும்பத்துக்கு நிவாரணம்:முதல்வர் உத்தரவு
சென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் பலியான மேலும் 5 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை கொடுங்கையூரில் கடந்த 15 -ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் கண்ணன், பாஸ்கரன், பார்த்திபன், மணிகண்டன், நரேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com