தமிழ்ச் சமுதாயத்தின் சொத்து கவிக்கோ: கவிஞர் வைரமுத்து

தமிழ்ச் சமுதாயத்தின் சொத்து கவிக்கோ அப்துல் ரகுமான் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.
சென்னையில் திங்கள்கிழமை இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற கவிக்கோ நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து.
சென்னையில் திங்கள்கிழமை இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற கவிக்கோ நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து.

தமிழ்ச் சமுதாயத்தின் சொத்து கவிக்கோ அப்துல் ரகுமான் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 24) நடைபெற்றது. நிகழ்ச்சியை பேராசிரியர் ஹாஜாகனி தொகுத்து வழங்கினார். கவிஞர் வைரமுத்து உள்பட பல்வேறு கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கவிக்கோவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
கவிஞர் வைரமுத்து: தமிழ்ச் சமூகத்தின் நவீன இலக்கிய அடையாளம் கவிக்கோ. நம் நாட்டில் கவிஞர்களை மதிப்பது கிடையாது. கவிஞன் ஒருவன் உயிரோடு இருக்கும் போது அவனுக்குரிய மதிப்பை நாம் கொடுப்பதில்லை. ஆனால், இறந்த பிறகு அவனைக் கொண்டாடுகிறோம். இந்த நிலை மாற வேண்டும். தவறுகளை எல்லாம் இறக்கி வைக்கும் சுமைதாங்கிதான் மரணம் என கவிக்கோ பாடினார். நம் தவறுகளைச் சரி செய்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் நாம் கவிக்கோவின் கவிதை நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்றார் வைரமுத்து.
ஆர்.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்): மனிதர்களின் மனசாட்சியைத் தொட்டுப் பேசுபவர் கவிக்கோ. சாதி, சமயம் கடந்து தமிழ், தமிழன் என்ற உரிமையைப் பாதுகாக்க அரும்பாடுபட்டவர். எல்லாக் கவிஞர்களையும், உலகில் உள்ள எல்லா மொழிகளையும் கற்று சிறந்தக் கவிஞராக விளங்கியவர் கவிக்கோ.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் : சாகாவரம் பெற்ற மக்களின் மனங்களில் இடம்பெற்றவர் கவிக்கோ. சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழுக்காக தமிழ் முனிவராகவும், தமிழ்த் துறவியாகவும் விளங்கியவர் அவர்.
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்: யாப்பு, மரபுகளைக் கடந்து தனது கவிதையின் மூலம் மனித நேயத்தில் ஊடுருவியவர் கவிக்கோ. கவிதையின் கருத்துகளில் புதுமையை உருவாக்கியவர் அவர். அத்தகைய சிறப்பு மிக்க கவிக்கோவையே எனக்கு பரிசாகக் கொடுங்கள் என்று கூறியவர் திமுக தலைவர் கருணாநிதி.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ : தமிழகத்தின் கலில் ஜிப்ரான் மறைந்த கவிக்கோ. கவிதை உலகத்தின் மன்னர் மன்னன் அவர். அவரது எழுத்துக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். கவிதை, ஹைக்கூ, கட்டுரை, கவியரங்கம் என அவருடைய கருத்துகள், கவிதையால் அவர் காட்டிய பாதை, அவர் வாழ்ந்த வாழ்க்கை தமிழகத்தின் கவிதைத் தலைமுறைக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.
விடுதலைச்சிறுத்தகைள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் : கவிக்கோ படைப்பாளியாக மட்டுமல்லாமல், போராளியாகவும் திகழ்ந்தவர். அவர் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்திருந்தாலும் அம்பேத்கராகவும், பெரியாராகவும் தமிழாகவும் விளங்கியவர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி : கவிக்கோவின் எழுத்துக்கள் நம் உரிமைகளின் பாதுகாப்புக்கான போர்க்கருவிகள். மூடநம்பிக்கையை எதிர்த்தவர் என்றார் வீரமணி.
இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அருணன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்பட பலர் பங்கேற்று கவிக்கோவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
கவிதைகள் மூலம் கவிக்கோவை பார்ப்போம்
கவிதைகள் மூலம் கவிக்கோவைப் பார்ப்போம் என தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் புகழாரம் சூட்டினார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சிலம்பொலி செல்லப்பன் உள்ளிட்டோர் செலுத்திய புகழஞ்சலி:
தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன்: புதுக்கவிதையிலும் நல்ல கவிதைகள் உண்டு; மரபுக் கவிதைகளிலும் குப்பைகள் உண்டு. எது சரியோ அதை ஏற்க வேண்டும் என்றார் கவிக்கோ. கம்பன், பாரதி, பாரதிதாசன் ஆகியோரைப் போன்று மண்ணை விட்டு அப்துல்ரகுமான் மறைந்தாலும் அவரது கவிதைகள் மூலம் நாளும் அவரைக் கண்டுகொண்டே இருப்போம்.
கவிஞர் மு.மேத்தா: திரைப்பாடல் எழுதுமாறு கேட்டபோது அம்மி கொத்த சிற்பி எதற்கு என்றார் அப்துல்ரகுமான். கவிக்கோ என்ற சிற்பி அம்மியைக் கொத்தியிருக்க வேண்டும்; ஏனெனில் அவர் கொத்தினால் அம்மி கூட அழகிய சிற்பமாகும். கவிதைகளை தயார் செய்யும் கவிஞர்கள் மத்தியில், கவிஞர்களையே தயார் செய்தவர் அப்துல்ரகுமான்.
கவிஞர் பழநிபாரதி: கவிக்கோ விட்டுச் சென்ற படைப்பு என்ற நெருப்பை காலத்தால் அழிக்க முடியாது. அந்த நெருப்புதான் எங்களை எழுத வைக்கிறது. மரணத்தைக் கூட கவிதையில் பதிவு செய்தவர் கவிக்கோ.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்: இயற்கையில் உங்களுக்கு பிடித்த பொருள் எது என கவிக்கோ என்னிடம் கேட்டார். மேகம் தழுவி மழையைத் தரும் மலைகள்தான் எனக்குப் பிடிக்கும் என்றேன்.
கடல் மனித மனதைப் போல் வெகு ரகசியமானது. தேடத் தேட கிடைத்துக் கொண்டே இருக்கும். அதனால் எனக்கு கடல்தான் பிடிக்கும் என்றார் கவிக்கோ. வாழ்வின் இறுதிவரை தேடலின் உறவிடமாக அவர் இருந்தார்.
புலவர் வே.பதுமனார்: உலகத்தில் உள்ள அத்தனை மார்க்கங்களையும் தனது கவிதையில் அடக்கி உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என்ற சூபி தத்துவத்தைக் கடைப்பிடித்தவர். பலராலும் கவிக்கோ என அழைக்கப்பட்ட போதும் எப்போதும் கர்வமும் கொள்ளாதவர்.
கவிஞர் ஜெயபாஸ்கரன்: எதுவெல்லாம் துலங்குமோ அதையெல்லாம் தொட்டவர். சிறந்த மாணவராக இருந்து பேராசிரியராக உயர்ந்தவர். சோர்வடைந்த கவியரங்கத்தை தனது கவிதையால் திரும்பிப் பார்க்க வைத்தார். அப்துல் ரகுமான் பெயரால் ஆய்விருக்கைகள் அமைக்கப்படுவதோடு, ஏராளமான விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
மந்தைவெளி பள்ளிவாசல் இமாம் இலியாஸ் ரியாஜி: ஒரு வரியை எழுதினால் அடுத்த வரியை முதல் வரியால் விஞ்சி விடுவார் கவிக்கோ. யாராலும் வளைக்க முடியாத இரும்பு மனிதராக வாழ்ந்த கவிக்கோ என்ற கருவூலத்தை இளைய தலைமுறை முழுமையாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்: இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், முன்னாள் துணைவேந்தர் சாதிக், கவிஞர் முத்துலிங்கம், நக்கீரன் கோபால், கவிஞர் அப்துல்ரகுமான் மகள் வஹிதா, மருமகன் ஹயாஸ் பாஷா, இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் சேமுமு.முகமதலி, பொதுச்செயலர் மு.அப்துல்சமது, பொருளாளர் எஸ்.எஸ்.ஷாஜகான், திரைப்பட இயக்குநர் என்.லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com