'நீட்' தேர்வு விவகாரம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்
'நீட்' தேர்வு விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை திங்கள்கிழமை சந்தித்த திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி.
'நீட்' தேர்வு விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை திங்கள்கிழமை சந்தித்த திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி.

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் திருச்சி சிவா கூறியது: தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு திடீரென அக்கறை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். இது குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டிய கதையாக இருக்கிறது. இதற்கு முன்பே, இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத் தந்திருக்க வேண்டும்.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டோம். எங்களது கோரிக்கையைப் பொறுமையாகக் கேட்ட அமைச்சர், இந்த விவகாரம் குறித்து சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு செவ்வாய்க்கிழமை முடிவைத் தெரிவிப்பதாகக் கூறினார் என்றார் திருச்சி சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com