ஜி.எஸ்.டி. பிரச்னை: தமிழகம் முழுவதும் ஆக.8-இல் கடையடைப்பு

வணிகர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் ஜி.எஸ்.டி.யை மாற்றி அமைக்க வலியுறுத்தி ஆக.8-ஆம் தேதி மாநில அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கத்தின்
ஜி.எஸ்.டி. விகிதங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே  வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள்.
ஜி.எஸ்.டி. விகிதங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள்.

வணிகர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் ஜி.எஸ்.டி.யை மாற்றி அமைக்க வலியுறுத்தி ஆக.8-ஆம் தேதி மாநில அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
ஜி.எஸ்.டியை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துத் தொழில் மற்றும் வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ஏ.எம்.விக்கிரமராஜா பேசியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி.யால் வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த வரி விகிதங்களை கட்டாயம் மாற்றி அமைத்தால்தான் வியாபாரம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் குடிநீரில்லாமல் அவதிப்படும் சூழ்நிலையில், தனியார் குடிநீர் பாட்டில்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு பொருள்களுக்கும் குறிப்பிட்ட அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் 160 நாடுகளில் ஜி.எஸ்.டி. குறைந்த வரி விகிதத்திலேயே அமலில் உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிக்கப்பட்டு, அதற்கு மாநில அரசும் ஆதரவு அளித்துள்ளது. இந்தியா முழுவதும் 21 கோடி வணிகர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் ஜி.எஸ்.டி குறித்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்து முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஆக.8-ஆம் தேதி மாநில அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இதையடுத்து தென் மாநில அளவில் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் பெங்களூரில் வரும் 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அளவில் மத்திய அரசை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநில மருந்து வணிகர்கள் சங்கம், மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் சங்கம், சென்னை அயனாவரம் பழைய பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கத்தினர் மற்றும் அனைத்து மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com