தமிழகத்தில் காங்கிரஸை வளர்க்க இது உகந்த நேரம்: அனில் சாஸ்திரி

தமிழகத்தில் காங்கிரஸை வளர்ப்பதற்கு இது உகந்த நேரம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர் அனில் சாஸ்திரி கூறினார்.

தமிழகத்தில் காங்கிரஸை வளர்ப்பதற்கு இது உகந்த நேரம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர் அனில் சாஸ்திரி கூறினார்.
சட்டப்பேரவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் எழுதிய வெற்றிப்படிக்கட்டு நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழா சத்தியமூர்த்திபவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. லால்பகதூர் சாஸ்திரியின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினருமான அனில் சாஸ்திரிநூலை வெளியிட தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பெற்றுக்கொண்டார். விழாவில் அனில் சாஸ்திரி பேசியது: அதிமுக பிளவுபட்டுள்ளது. இது, தமிழகத்தில் காங்கிரஸை வளர்ப்பதற்கான உகந்த சூழல். இதனை காங்கிரஸார் சரியாகப் பயன்படுத்த வேண்டும். பொதுமக்களையும், வாக்காளர்களையும் நேரில் சந்தித்து காங்கிரஸின் பணிகளை எடுத்துரைக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதே மோடி அரசின் கொள்கையாக உள்ளது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் படுகொலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குரல் எழுப்பியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
விழாவுக்குப் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, நாடாளுமன்றத்தில் வெளிநடப்புகள் இருந்துள்ளன. ஆனால், வெளியேற்றம் என்பது இருந்ததில்லை. பாஜக ஆட்சியில் நாடாளுமன்றத்தில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு காந்தி சிலைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதச் செயல்.
குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் அதிமுகவின் 3 அணியினரும் போட்டி போட்டுப் பங்கேற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிக்க, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்க வேண்டும். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு முன்பாவது இந்த நிபந்தனையை விதித்து, நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற்றுத்தர வேண்டும்.
தில்லியில் போராடி வரும் அய்யாக்கண்ணு தனக்கு அச்சுறுத்தல், கொலை மிரட்டல் இருப்பதாகக் கூறுகிறார். அது அரசியல் ரீதியிலான கொலைமிரட்டலாக இருந்தாலும் சரி, வேறு எவ்வித அச்சுறுத்தலாக இருந்தாலும் அதனைக் கண்டிக்கிறோம் என்றார்.
முன்னாள் மாநிலத் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் கே. சிரஞ்சீவி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com