வெளியூர் மக்கள் ராமேசுவரம் வர வேண்டாம்: காவல்துறை அறிவிப்பு

வரும் 27- ஆம் தேதி கலாம் மணிமண்டபத்தை பிரதமர் திறந்து வைக்க இருப்பதாலும், ஆடித் திருவிழாவுக்காக ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் நடை சாத்தப்பட இருப்பதாலும் வெளியூர் மக்கள்

வரும் 27- ஆம் தேதி கலாம் மணிமண்டபத்தை பிரதமர் திறந்து வைக்க இருப்பதாலும், ஆடித் திருவிழாவுக்காக ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் நடை சாத்தப்பட இருப்பதாலும் வெளியூர் மக்கள் ராமேசுவரம் வருவதை தவிர்க்குமாறு ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேசுவரம் பேக்கரும்பில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் மணிமண்டபத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ( 27 ஆம் தேதி) திறந்து வைக்க வருகை தரவுள்ளார். இவ்விழாவில் தமிழக முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். அதே 27 ஆம் தேதி ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலின் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அதிகாலை 6 மணிக்கு சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டதும் கோயில் நடை அடைக்கப்பட்டு ராமர் தீர்த்தம் அருகில் மாலை மாற்றுதல் வைபவம் முடிந்து மாலை 5.30 மணிக்கு மேல் மீண்டும் கோயில் நடை திறக்கப்படவுள்ளது.
எனவே வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஜூலை 26 ,27 ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாலை மார்க்கமாக ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் நோக்கி செல்வதையும், ராமேசுவரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி வருவதையும் பொதுமக்கள் தவிர்க்குமாறு மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com