தமிழகத்தில் மின்கட்டண உயர்வு இருக்காது

தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தில் உயர்வு இருக்காது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தில் உயர்வு இருக்காது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 2014 டிச.11}இல் நிர்ணயம் செய்யப்பட்ட மின்கட்டண விகிதம் தற்போது நடைமுறையில் உள்ளது. 2016}17 முதல் 2018}19 வரை மின் வாரியத்தின் மொத்த வருவாய் தேவைக்கும், 2017}18}இல் மின் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கும் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தற்போதைய கட்டணத்தை மேலும் உயர்த்தாமலும், மின்நுகர்வோரைப் பாதிக்காமல் அரசு மானியத்தைச் சரிசெய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர் சு.அட்சயகுமார், உறுப்பினர்கள் கே.ராஜகோபால், த.பிரபாகர ராவ் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
தாழ்வழுத்த மின்இணைப்புகள் உள்ள ஆலைகளுக்கு வழங்கப்படும் மின்நுகர்வு அளவீட்டை 112 கிலோவாட்டில் இருந்து 150 கிலோ வாட் ஆக உயர்த்த வேண்டும் என்று மதுரை நூற்பாலைகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மின்கணக்கீட்டை இரு மாதங்களுக்கு ஒருமுறை என்பதை, பிரதி மாதம் என மாற்ற வேண்டும் என்றும், கணக்கீடு செய்ய வரும்போது வீடு பூட்டியிருந்தால், கணக்கீடு செய்யவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் அடையாள ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இலவச மின்இணைப்பு கிடைக்க தாமதமாவதால், விவசாயிகள் பலரும் கட்டணம் செலுத்தி விவசாய மின் இணைப்பு பெறுகின்றனர். அதற்கான விண்ணப்பம் அளிக்கும்போது நில ஆவணங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று சமர்ப்பிக்கப்படுகிறது. இந்நிலையில், இலவச மின் இணைப்புக்குத் தனியாக மேற்குறிப்பிட்ட ஆவணங்களைத் தர மறுக்கின்றனர். ஆகவே, கட்டண அடிப்படையிலான விவசாய மின் இணைப்புக் கோரும்போதே, இலவச மின் இணைப்புக்கான பதிவு மூப்பு பட்டியலிலும் சேர்க்கும் வகையில் கொள்கை வகுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மீன் வளர்ப்பு விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஸ்கீரின் பிரிண்டிங் போன்ற குடிசைத் தொழில்களுக்கு வணிக மின் இணைப்புக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கட்டண அடிப்படையிலான விவசாய மின் இணைப்புகள் பெற்றுள்ள விவசாயிகளை, நேரடியாக இலவச மின் இணைப்புக்கான மூப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆணையத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுவது தொடர்பான தகவல் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்தாலும் இன்னும் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் பதில் அளித்துப் பேசியது:
மின்கணக்கீடு முறையை ஒவ்வொரு மாதமும் என மாற்றினாலும் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. தற்போது 100 யூனிட் வரை என நிர்ணயம் செய்வது, பிரதி மாதம் கணக்கீடு செய்தால் 50 யூனிட் வரை என மாறிவிடும். இதனால் கட்டணம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து செய்யக் கூடிய குடிசைத் தொழிலாக இருக்கும் பட்சத்தில் அதற்கு வணிகக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலுக்கு வணிகக் கட்டணம் வசூலிப்பதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com