நீட் விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது

நீட் விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக திமுக செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீட் விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது

நீட் விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக திமுக செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை கணியூர் சுங்கச் சாவடி அருகே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதனால், இந்தப் போராட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெறும் என்பதால், அதற்குப் பயந்து போராட்டத்தைச் சீர்குலைக்கும் விதமாகவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கிலும் ஆட்சியாளர்கள் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்காக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரதமர், மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வருவதாகத் தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றனர்.
சந்திப்பின்போது, அவர்கள் என்ன பேசிவிட்டு வருகின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பதாகக் கூறும் அதிமுக அரசு இதே கோரிக்கைக்காக திமுகவினர் நடத்தும் போராட்டத்துக்கு முதலில் அனுமதி வழங்கிவிட்டு, பின்னர் ரத்து செய்துள்ளது. நீட் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. தங்கள் மீதான வழக்குகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அதிமுக அரசு மத்திய அரசிடம் சரணாகதி அடைந்துவிட்டது.
தமிழகத்தில் மக்கள் ஒத்துழைப்புடன் திமுகவினர் கடந்த 2 மாதங்களாக ஏரி, குளங்களைச் சீரமைத்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் உள்ள கச்சராயன் ஏரியை அப்பகுதி திமுகவினர் சீரமைத்து முடித்துள்ள நிலையில், அதை நான் பார்வையிடுவதற்காகச் செல்ல இருந்தேன். ஆனால், நான் அங்கு செல்ல முடியாதவாறு போலீஸார் தடுக்கின்றனர்.
முறைப்படி அனுமதி பெற்றே திமுகவினர் ஏரிகளைத் தூர்வாரி வருகின்றனர். இதில், அரசியல் எதுவும் இல்லை. நீர்நிலைகள் தூர்வாரப்பட்டிருப்பதால் மழை பெய்தால் தொடர்ந்து 4 ஆண்டுகள் வரையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.
ஆனால், நீர்நிலைகளைத் தூர்வாருதல் என்ற பெயரில் ரூ. 300 கோடியை செலவிட்டதாக அரசு கூறி வருகிறது. இதில், பெரும் அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்களைத் திரட்டி வருகிறேன். இதன் விவரங்களை விரைவில் வெளியிடுவேன். திமுகவுக்குப் பயந்து இந்தப் போராட்டத்தை போலீஸ் மூலம் தடுத்திருப்பதே எங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com