மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு! 

மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு! 

சென்னை: மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வளந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களின் காரணமாக நிலத்தடி நீர் வளம் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவைட வேண்டும் என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.  

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதியன்று பிறப்பித்த உத்தரவில் மாவட்டம் தோறும் சீமைக் கருவேல மரங்களை நீக்குவதனை ஆட்சித் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டுமென்றும், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.மேகநாதன் என்பவர் பொது நல மனு ஒன்றனை தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:

சீமைக் கருவேல மரம் வளர்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, இவற்றை முற்றிலுமாக ஒரே நாளில் அழிக்க முடியாது. இதற்கு அறிவியல் பூர்வமான விதிமுறைகள் வேண்டும்.

எனவே, அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே, இம்மரங்களை வெட்ட வேண்டும். இதற்காக தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்குத் தடை விதிப்பதோடு, பாதிப்பை ஆய்வு செய்ய ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி, அதுவரை சீமைகருவேல மரங்களை அகற்ற இடைக்காலத் தடை விதித்து ஏப்ரல் 28-ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அய்யாதுரை, அறிவியல் ரீதியாக, சீமைக் கருவேல மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை ஆராய்வதற்கு முதன்மை தலைமை வனத்துறை அதிகாரி தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழுவை அமைத்து மே 10-இல் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இக்குழு மூன்று மாதத்துக்குள் ஆய்வறிக்கையை வழங்கும். அதுவரை சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்படமாட்டாது என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பில், அரசு அமைத்த குழுவில் ஐ.ஐ.டி பேராசிரியர் உள்பட நான்கு பேரை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை நீதின்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சீமைக் கருவேல மரங்களினால் உண்டாக்கும் பாதிப்புகள் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்கட்டமாக நீர் நிலைகளில் வளந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தது. மேலும் இந்த வழக்கினை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com