விஜய், டோட்லா மற்றும் ஆரோக்கியா பால் வகைகள் தரம் குறைந்தவை: நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை!

விஜய், டோட்லா மற்றும் ஆரோக்கியா பால் வகைகள் தரம் குறைந்தவை என்று உயர்நீதி மன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
விஜய், டோட்லா மற்றும் ஆரோக்கியா பால் வகைகள் தரம் குறைந்தவை: நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை!

சென்னை: விஜய், டோட்லா மற்றும் ஆரோக்கியா பால் வகைகள் தரம் குறைந்தவை என்று உயர்நீதி மன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் சில தனியார் பால் நிறுவனங்களின் பால் வகைகளில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படுவதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். அதற்கு தனியார் பால் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அதில் பால் மாதிரிகளினை சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கை விபரம் வருமாறு:

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் விஜய், டோட்லா மற்றும் ஆரோக்கியா பால் வகைகள் தரம் குறைந்தவை என்று ஆய்வக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இம்மாதம் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்தில்  சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையின் முடிவுகள் நேற்று முன்தினம் (26-ஆம் தேதி) அளிக்கப்பட்டன. இதில் இந்த மூன்று நிறுவன பால் மாதிரிகளிலும் கொழுப்புச் சத்தின் அளவு மற்றும் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய பால் நிறுவனங்கள் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் அவகாசம் கோரியதால், வழக்கினை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com