இலங்கையில் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவித்தது போன்று, அங்குள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவித்தது போன்று, அங்குள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை எழுதிய கடித விவரம்: இலங்கைச் சிறைகளில் இருந்து 45 மீன்பிடி படகுகள், 75 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவரது காலத்தில் எழுதிய கடிதங்களைத் தொடர்ந்தும், தமிழக அரசும் தொடர்ச்சியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்தும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தனிப்பட்ட முறையில் தலையிட்டதற்கும், இதற்காக சீரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கும் தமிழக மக்களின் சார்பில் எனது நன்றிகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதங்கள், நான் தங்களுக்கு எழுதிய கடிதங்கள் போக, கடந்த 27}ஆம் தேதி ராமேசுவரத்தில் தங்களை நேரில் சந்தித்த போது மீனவர்கள் பிரச்னைகள் தொடர்பாக வலியுறுத்தினேன். இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க அனைத்து வகையான சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன்.
கடந்த 27}ஆம் தேதி தாங்கள் தமிழகத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்பாகவே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருந்து, தமிழக அரசுக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. அதன்படி இலங்கைச் சிறையிலுள்ள தமிழக மீனவர்களையும், 42 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தது. இலங்கைச் சிறையில் இருந்து 75 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்காகத் தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
107 படகுகளை விடுவிக்க வேண்டும்: இலங்கை வசம் தமிழகத்தைச் சேர்ந்த 107 மீன்பிடி படகுகள் உள்ளன. எனவே, இந்தப் படகுகளை விரைந்து விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com