அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்போம்: தினகரன், திவாகரன் கூட்டாக பேட்டி

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்போம் என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனும், சசிகலாவின் சகோதரர் திவாகரனும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்போம் என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனும், சசிகலாவின் சகோதரர் திவாகரனும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
இரு அணிகளும் இணைய எங்கள் குடும்பமே தடையாக இருப்பதாகக் கூறினர். இதனால் நான் சில காலம் ஒதுங்கி இருப்பதாகக் கூறினேன். அந்த 60 நாட்கள் ஆகஸ்ட் 4}ஆம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு எனது பணியைத் தொடங்கவுள்ளேன்.
முதல்கட்டமாக இரு அணிகளையும் இணைப்பது, கட்சியைப் பலப்படுத்துவது ஆகிய பணிகளை மேற்கொள்வேன். வரும் 2019}ல் மக்களவைத் தேர்தல் வருகிறது. பொதுச் செயலர் ஆணைப்படி எனது பணியைச் செய்வேன்.
சொந்த பந்தத்தில் நாங்கள் ஒன்றாகத்தான் உள்ளோம். கட்சியில் உள்ள நண்பர்களுடனும் எனக்குப் பிரச்னை இல்லை. இதை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன. சிலர் எங்களைத் தவறாகக் கருதியிருக்கலாம். அவர்களும் புரிந்துகொண்டு இணைவர் என எதிர்பார்க்கிறோம் என்றார் தினகரன்.
உடனிருந்த திவாகரன் தெரிவித்தது: இந்தித் திணிப்பு, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போராடுவதால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதிமுக மிகப் பெரிய சக்தி. இதை யாராலும் எளிதில் அழித்துவிட முடியாது. அதிமுகவில் இருந்து ஒரு தொண்டர்கூட மற்ற கட்சிகளில் இணையவில்லை. ஒரு நிமிடம் போதும் எங்களுக்கு. எல்லா அணிகளையும் இணைத்து விடுவோம்.
ஓ. பன்னீர்செல்வத்தால் பிரச்னை இல்லை. அவர் எங்களது பங்காளிதான். எப்போது வேண்டுமானாலும் அவர் வருவார். அந்த அணியிலிருந்து ஒவ்வொருவராக எங்களுடன் இணைகின்றனர். கட்சியும், ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டுமென்பதே எங்களது நோக்கம். வேறு எதுவும் இல்லை என்றார் திவாகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com