சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளில் சிக்கிய தங்க, வைர நகைப் பெட்டகம்: அனைத்து தகவல்களும் விரிவாக

சென்னை தியாகராய நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளிடையே தங்க, வைர நகைகள் இருக்கும் பாதுகாப்பு பெட்டகம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளில் சிக்கிய தங்க, வைர நகைப் பெட்டகம்: அனைத்து தகவல்களும் விரிவாக

சென்னை: சென்னை தியாகராய நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளிடையே தங்க, வைர நகைகள் இருக்கும் பாதுகாப்பு பெட்டகம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த விவரம்:
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைத்தளத்தில் நகைக் கடை செயல்பட்டு வந்தது. இந்த நகைக் கடையில் பல நூறு கிலோ தங்க நகைகளும், வைர நகைகளும் இருந்தன. இந்த நகைகள் செவ்வாயக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும், அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன.

இந்நிலையில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்ட பின்னர், இந்த பாதுகாப்பு பெட்டகம் என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியாமலேயே இருக்கிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த பின்னர், அந்த பாதுகாப்பு பெட்டகம் கட்டட இடிபாடுகளிடையே சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கட்டடம் இடிக்கப்பட்ட பின்னரே, பாதுகாப்பு பெட்டகத்தை மீட்க முடியும் என்பதால்,சென்னை சில்க்ஸ் கட்டடத்தை சுற்றி பாதுகாப்புக்கு அதிகளவில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வெடிவைத்து தகர்க்காதது ஏன்?
தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடம், 3 நாள்களில் முழுமையாக இடிக்கப்படும் என நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை அமைச்சர் ஜெயக்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் அளித்த பேட்டி:

கட்டடத்தில் இருந்த தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டது. பொதுமக்கள் இனி அச்சப்பட தேவையில்லை. தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் உறுதியற்ற நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கட்டடத்தை உடனே இடிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டடத்தை முழுமையாக இடிக்க 3 நாள்களாகும். வெடி வைத்து தகர்த்தால் அருகிலேயே உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பொதுமக்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்த கட்டடத்தை ராட்சத கிரேன் மூலம் இடிக்க முடிவு செய்துள்ளோம். கட்டடத்தை இடிக்க ஆகும் செலவு, சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும்.

இந்தப் பணி நிறைவடைந்த பின்னர், தியாகராயநகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் கட்டட விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல கட்டட விதிமீறல் முறைகேடுகளுக்கு துணை போன அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயக்குமார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டி:

சென்னை சில்க்ஸ் விதிமீறல் கட்டடமா? எப்படி?

சென்னை சில்க்ஸ் நிறுவன நிர்வாகம், 4 தளங்களை கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு, 8 தளங்களை கட்டியுள்ளது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை சில்க்ஸ் கட்டட தீ விபத்து தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மேலும் கூறியது:

தரை தளம் தொடங்கி நான்கு தளங்களுக்கு மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் விதிகளை மீறி 8 தளங்கள் வரை கட்டியதால் அவற்றை இடிப்பதற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

கடந்த 2006 -ஆம் ஆண்டு கட்டடத்தின் 5 முதல் 7 வரை உள்ள தளங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு எதிராக கட்டட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் கட்டட இடிப்பு நிறுத்தப்பட்டது. தியாகராய நகரில் 86 கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, 25 பெரிய வணிக நிறுவன கட்டடங்களுக்கு கடந்த 2011 -ஆம் ஆண்டு சீல் வைக்கப்பட்டது. அவ்வாறு சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் கட்டடமும் ஒன்று.
சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பல கடைகளின் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து நீதிமன்றம் சென்றதால், அனைவருக்கும் பொதுவான தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்த உத்தரவின்படி சீல் அகற்றப்பட்டது.

சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்தக் குழு விதிமீறல் கட்டடங்களை வரைமுறைப்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது.

அதன் பேரில், தமிழ்நாடு நகரமைப்பு சட்டத்தில் 113சி பிரிவைச் சேர்த்து, 2007 ஜூலை மாதத்துக்கு முன்னர் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களுக்கு சில விதிவிலக்குகளை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவு இன்னும் அமலுக்கு வரவில்லை. அதுவரை தியாகராய நகரில் விதிமீறல் கட்டடங்கள் செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தியுள்ளோம்.

இந்தப் பிரிவு அமலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்.

தியாகராய நகரில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் விதிவிலக்கு அளிக்கக்கூட தகுதியற்றவையே. 113சி சட்டப் பிரிவு அடுத்த 2 மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்றார் அவர்.

சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைப்பு
தியாகராயநகர் துணிக்கடை தீ விபத்து நடந்த இடத்தில் 10 மருத்துவர்களை உள்ளடக்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நடமாடும் மருத்துவக் குழுக்களும் விபத்து நடந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளன.

சென்னை தியாகராய நகரிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடை தீ விபத்தில் அதிகளவில் புகை வெளியேறி உள்ளது. நகை மற்றும் ஜவுளிக்கடையில் தீ விபத்து நடந்துள்ளதால் வேதிபொருள்கள் மற்றும் நச்சுவாயு சுமார் 5 கி.மீ. வரை பரவி இருக்கும்.

நச்சுவாயுவை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, பெரியவர்களுக்கு, தலைவலி, மயக்கம், கண் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சளியுடன் ரத்தம் வருதல் போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, ஆஸ்துமா, நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தீ விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே, ஓரிரு நாட்கள் செல்ல வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது:

சுகாதாரத் துறை சார்பில் 3 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஏதேனும் அசெளகரியங்களை உணர்ந்தால் இந்தக் குழுவினரிடம் சிகிச்சை பெறலாம்.

மேலும், நெஞ்சு சிகிச்சை நிபுணர் தலைமையில் 10 மருத்துவர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி சார்பிலும் மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. தேவை இருந்தால் மருத்துவக் குழுவினரின் சேவைகள் மேலும் சில நாள்கள் நீட்டிக்கப்படும் என்றார்.

ஸ்கை லிப்ட்டை இயக்க தில்லியில் இருந்து வந்த பொறியாளர்
'ஸ்கை லிப்ட்' வாகனத்தை, தீயணைப்புத்துறையினர் இயக்க முடியாமல் திணறியதால், அதை இயக்குவதற்கு தில்லியில் இருந்து பொறியாளர் வரவழைக்கப்பட்டார்.

பல மாடி கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைப்பதற்காக தமிழக தீயணைப்புத் துறைக்காக 104 அடி உயர 'ஸ்கை லிப்ட்' வாகனம் கடந்தாண்டு வாங்கப்பட்டது. இதேபோல 54 அடி உயரம் வரை செல்லும் 'ஸ்கை லிப்ட்' வாகனமும் வாங்கப்பட்டது.

இந்த வாகனங்களை இயக்குவதற்காக தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஸ்வீடன் நாட்டுக்குச் சென்று, பிரத்யேக பயிற்சி பெற்று வந்தனர். இந்த வாகனங்கள் முதல் முறையாக சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு பயன்படுத்த அங்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

இதில், 54 அடி உயரம் வரை செல்லும் வாகனத்தை அதிகாரிகள் எளிதாக கையாண்டு தீயை அணைத்தனர். அதேநேரத்தில் 104 அடி உயரம் வரை செல்லும் வாகனத்தை இயக்குவதில் அதிகாரிகள் திணறினர். ஒரு கட்டத்தில் அந்த வாகனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த கோளாறை தீயணைப்புத்துறை அதிகாரிகளால் சரி செய்ய முடியவில்லை.

இதையடுத்து தீயணைப்புத்துறையின் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். அந்த நிறுவனத்தினர், தில்லியில் இருந்து ஒரு பொறியாளரை வியாழக்கிழமை அனுப்பி வைத்தனர். அந்த பொறியாளர், அரை மணிநேரத்தில் அந்த வாகனத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்தார். அதன் பின்னர் அந்த வாகனத்தை, தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தினர்.

தீவிபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்
சென்னை தியாகராயநகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.

இந்தக் கட்டடத்தில் புதன்கிழமை பிடித்த தீ 7 மாடிகளுக்குப் பரவியது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பிஞ்சல சுப்ரமணியம் தெரு, வெங்கடேசன் தெருவின் குடியிருப்பு பகுதிகளைச் சேரந்த பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

புகைமூட்டம் காரணமாகவே அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்களின் வசதிக்காக தியாகராயநகரைச் சுற்றி 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ வசதிக்காக நிறுத்தப்பட்டிருந்தன.

200 மீட்டர் அபாயகரமானது: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பரவிய தீயினால் சேதமடைந்த கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெறவுள்ளது. எனவே, அசம்பாவிதங்களைத் தவிர்க்க தீ விபத்து நடந்த பகுதியைச் சுற்றியிருக்கும் 200 மீட்டர் தூரம் வரை அபாயகரமானதாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டது.

தியாகராயநகர் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பல்வேறு வீதிகளைச் சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் வரவேண்டாம் என காவல்துறையினர் ஒலிப்பெருக்கிகள் மூலம் எச்சரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வடக்கு உஸ்மான் மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com