இன்று கருணாநிதியின் சட்டமன்றப் பணி வைரவிழா: ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை பணி வைரவிழா மற்றும் 94-ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 3) நடைபெற உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவைப் பணி வைர விழாவையொட்டி பேரவை வடிவில் தயாரான மேடை.
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவைப் பணி வைர விழாவையொட்டி பேரவை வடிவில் தயாரான மேடை.

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை பணி வைரவிழா மற்றும் 94-ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 3) நடைபெற உள்ளது.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார்.
இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வரும் ராகுல்காந்தி, ஆழ்வார்பேட்டை செனடாப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து விழா மேடைக்கு வர உள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
கருணாநிதிக்கு வாழ்த்து: கேரள முதல்வர் பினராயி விஜயன் கருணாநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவரின் பணிகள் பல ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்றார்.
லாலு பிரசாத் வரவில்லை: விழாவில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், உடல் நலக் குறைவு காரணமாக விழாவில் பங்கேற்க முடியவில்லை லாலு கூறியுள்ளதுடன், கருணாநிதிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியுடன் குடும்பத்தார் சந்திப்பு: கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சனிக்கிழமை காலை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மட்டும் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். அதேசமயம் அரசியல் தலைவர்கள் கருணாநிதியைச் சந்திப்பதற்கான வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது.
தமிழசை வாழ்த்து: எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதியின் பெயர் ஒலிக்காத பகுதி இருக்க முடியாது. எத்தனை அரசியல் சூழ்நிலைகளையும் சமாளிக்கக் கூடியவர்.
பல அரசியல் சூழ்ச்சிகளையும் கடந்து வந்தவர். இன்றைய சூழ்நிலையில் அவர் முழு உடல் நலம் பெற்று நீடுழி வாழ வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கேரள ஆளுநர் பி. சதாசிவம், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுகவினர் யாரும் கருணாநிதியைச் சந்திக்க வரவேண்டாம் என்று திமுக தலைமை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com