சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும்

புதுச்சேரி அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதை புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என, முதல்வர் வி.நாராயணசாமி
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும்

புதுச்சேரி அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதை புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என, முதல்வர் வி.நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் அவர் சென்டாக் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது:
முந்தைய ஆண்டுகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு இட ஒதுக்கீட்டு முறை இல்லை. தற்போது இந்த அரசின் விடா முயற்சியால் 50 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுள்ளோம்.
அதன்படி, 318 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீதம் (162 இடங்கள்) பெறப்பட்டன.
நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான குழு அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ. 3 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ. 13 லட்சம் என கட்டணத்தை நிர்ணயம் செய்தது. இதனை எதிர்த்து, தனியார் கல்லூரி நிர்வாகங்கள் வழக்குத் தொடர்ந்தன.
பின்னர், கட்டணக் குழுவை மீண்டும் கூட்டி அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ. 5.5 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ. 14 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த 30-ஆம் தேதி ஆளுநர் கிரண் பேடி சென்டாக் அலுவலகத்துக்குச் சென்று அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிர்வாக ஒதுக்கீடாக தரப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டைக் கூறி, சென்டாக் ஒருங்கிணைப்பாளரிடம் சில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு கடிதங்களை வழங்கும்படி உத்தரவிட்டார். 26 மாணவர்களுக்கு ஒதுக்கீடு கடிதம் தரும்படி அவர் கூறியுள்ளார்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழுவின் அதிகார வரம்புக்குள் வருவதாக துணைநிலை ஆளுநர் உறுதி அளித்ததால், 22 மாணவர்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்தனர். புதுவை மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் இவ்வாறு செயல்பட்டுள்ளார்.
மேலும், அரசியல்வாதிகள், அதிகாரிகள் முறைகேடு செய்வதாக சமூக வலைதளங்களில் ஆளுநர் கூறியுள்ளார். இவ்வாறு கூற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறக் கூடாது. இதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com