வழித்தடங்களை வரையறுப்பதில் தொடரும் சிக்கல்கள்: ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்!

தமிழகத்தில் யானைகளின் வழித்தடங்களை வரையறுப்பதில் தொடரும் சிக்கல்கள் காரணமாக ஊருக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க முடியவில்லை என்று வனத்துறை
வழித்தடங்களை வரையறுப்பதில் தொடரும் சிக்கல்கள்: ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்!

தமிழகத்தில் யானைகளின் வழித்தடங்களை வரையறுப்பதில் தொடரும் சிக்கல்கள் காரணமாக ஊருக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க முடியவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோவை போத்தனூர் பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து தாக்கியதில் வியாழக்கிழமை 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள யானைகள் வழித்தடத்தில் மனிதர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் காரணமாக, யானைகள் மனிதர்களை தாக்குவது தொடர்ந்து கொண்டே வருகிறது.
கடந்தாண்டு கூட கோவை மாவட்டம், மதுக்கரையில் காட்டு யானை ஊருக்குக்குள் புகுந்துவிட, அது கும்கியானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டு டாப்ஸ்லிப் முகாமுக்கு அனுப்பப்பட்டது.
பெரும்பாலான இடங்களில் யானைகள் ஊருக்குள் புகுந்ததாகவே மக்கள் சொல்கிறார்கள். ஆனால், யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் அவை மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகின்றன. யானைகளுக்கு நினைவாற்றல் அதிகமுண்டு. எனவே, அவை தங்களது வழித்தடத்தை அவ்வளவு எளிதில் மறக்காது. கோவை, ஒசூர், தருமபுரி, ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப் பகுதிகளில்தான் யானைகள், மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன. இவற்றில், கோவை மாவட்ட வனப் பகுதி இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.
கோவையில் வழிபாட்டுத் தலங்கள், தங்கும் விடுதிகள், கல்லூரிகள், வீடுகள் என ஆக்கிரமிப்புகளுக்கு அளவே இல்லை. எப்போதும்போல வனத் துறையினர் யானைகள் ஊருக்குள் வரமால் தடுப்பதற்கான முயற்சிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர்.
வரையறுப்பதில் சிக்கல்: வனப்பகுதி, வருவாய் நிலங்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வனப்பகுதியில் எவை யானைகள் வழித்தடம் என தனியாக அடையாளம் காட்டிவிட முடியும். ஆனால், வருவாய் நிலங்கள் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் யானைகள் வருவதற்கு வனத்தை ஒட்டியுள்ள பகுதிகள் நகரமயாமாக்கல் காரணமாக விரிவாக்கம் செய்யப்பட்டதால் யானைகள் வழித்தடம் அடைபட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாற்றம், ஆக்கிரமிப்புகள் காரணமாக யானைகள் கூட்டம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயர்கின்றன. ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20-30 யானைகள் இருக்கும். ஆனால், இப்போது 6- 10 யானைகள் மட்டுமே உள்ளன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சில யானைகள் கூட்டத்தை விட்டுப் பிரிந்து ஊருக்குள் புகுந்துவிடுவதால் பிரச்னைகள் எழுகின்றன.
இது குறித்து சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் மோகன்ராஜ் கூறியது:
25 ஆண்டுகளுக்கு முன்பே எவையெல்லாம் யானைகள் வழித்தடம் என கண்டறியப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கலுக்கு பின்பு காட்டையொட்டி உள்ள பகுதிகள் வருவாய் நிலங்களாகப் பிரிக்கப்பட்டு அவை விற்கப்படுகின்றன. நிலத்தை வாங்கியவர்களுக்கு அவை யானைகளின் வலசைப்பாதை என தெரியாது. இந்த நிலத்தில் பெரும் பணக்காரர்கள் வீடுகளை கட்டும்போது மின்வேலி, பெரிய சுற்றுசுவர்களை எழுப்பி கட்டிவிடுகின்றனர். அப்போது தங்கள் பாதைக்கு வரும் யானைகள் இந்த தடுப்புகளால் வேறு பாதைக்கு செல்கின்றன. அங்கே எளியவர்கள் வீடு கட்டி இருக்கும்போது, அவர்கள் யானைகளால் பலியாகின்றனர். உண்மையில் யானைகள் மனிதனுக்கு எதிரியல்ல. பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல வனங்களையொட்டியுள்ள பகுதியில் நிலங்களை வாங்கும்போது எச்சரிக்கை தேவை என்றார் மோகன்ராஜ்.
இதுகுறித்து இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி (கோவை) கூறியதாவது:
காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள் அதிகமாகிவிட்டதால், யானைகளின் வழித்தடம் மறைக்கப்படுகிறது. யானைகள் தங்கும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால், மனிதர்கள் வசிக்கும் இடங்களை நோக்கி நகர்கின்றன.
மேலும், யானைகள் மனிதர்களைத் தாக்குவதற்கு முக்கியமான காரணம் கடந்த 10 ஆண்டுகளில் அவற்றுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், மனிதர்களின் ஆக்கிரமிப்பு, இடையூறு போன்றவையே. அதனால், அவை மனிதர்களை எதிரியாகக் கருதத் தொடங்கிவிட்டன. நமது முன்னோர்கள் யானைகளைப் புரிந்து கொண்டு வனத்தையும் பாதுகாத்தனர். ஆனால், இப்போதுள்ள நிலைமை வேறு.
யானைகள் மனிதர்களைத் தாக்காமல் இருப்பதற்கு அகழி வெட்டுவது, மின் வேலி அமைப்பது போன்றவை தாற்காலிக ஏற்பாடுதான்.
யானைகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமே, யானைகளையும், மனிதர்களையும் காப்பாற்ற முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com