குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவோம்: சீதாராம் யெச்சூரி - டி.ராஜா பேட்டி

குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதியை
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவோம்: சீதாராம் யெச்சூரி - டி.ராஜா பேட்டி

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் கூறியுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை அவரது கோபாலபுரம் இல்லத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்தார். அவருடன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோரும் சென்று சந்தித்தனர்.

இதேபோன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. ஆகியோரும் கருணாநிதியை சந்தித்தனர். அவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உடனிருந்தனர். பின்னர் வெளியே வந்த சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதியை பார்த்தேன். டாக்டர்களிடமும் அவரது உடல் நிலையை கேட்டறிந்தேன். அவர் நன்றாக குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவுக்கு வந்த தலைவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்.

ஏற்கனவே, தில்லியில் சோனியாகாந்தி தலைமையில் 17 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்தோம்.

எனவே, அனைவரும் இணைந்து எங்களது வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்வோம். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களையும் ஆலோசித்து முடிவு எடுப்போம். மக்களின் குரலை எதிரொலிக்கும் வேட்பாளராக அவர் இருப்பார் என்றார்.  

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. கூறுகையில், எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டியும் நானும் இன்று கருணாநிதியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தோம். அவரது உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கருணாநிதி எங்களை உற்றுநோக்கி புன்முறுவல் செய்தார். அது எங்களுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்பட வாழ்த்திவிட்டு வந்தோம்.

இன்றைய சூழலில் மத்தியில் உள்ள பாஜக அரசின் கொள்கைகள் மக்கள் விரோத கொள்கையாக உள்ளது. மதவெறி கொள்கையை முன்னிலைப்படுத்தும் வகையில் இருக்கிறது. மக்கள் விரோத செயலில் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள்.

பாராளுமன்றத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது. இந்த ஆட்சியில் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

விவசாயிகள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே, எல்லா தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டியுள்ளது. பறந்து விரிந்த மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டியுள்ளது.

நேற்று கருணாநிதியின் வைர விழாவில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டிருக்கிறோம். கருணாநிதி ஆரோக்கியமாக இருந்திருந்தால் அவரே முன்னெடுத்து பணிகளை செய்திருப்பார்.

தற்போது அந்த பணியை மு.க.ஸ்டாலின் எடுத்து நிறைவேற்றி உள்ளார். இந்த ஒற்றுமை இயக்கம் மக்கள் நலன் காக்கும் இயக்கமாக உள்ளது. இந்தியாவை காக்கும் இந்த இயக்கம் தொடர வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவதில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

மதசார்பற்ற ஜனநாயகத்தை காப்பாற்றும் ஒரு தலைவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவதே எங்கள் விருப்பம்.

ஆனால், பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் எந்த அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களது அறிவிப்பை தொடர்ந்து எங்கள் நிலைப்பாடு அமையும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com