ஒன்பது மாவட்ட எம்.எல்.ஏக்களை இன்று மாலை சந்திக்கிறார்  முதல்வர் பழனிசாமி: முற்றுகிறது மோதல்?

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை இன்று காலை முதல் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சந்தித்து வரும் வேளையில், ஒன்பது மாவட்ட எம்.எல்.ஏக்களை முதல்வர் பழனிசாமி...
ஒன்பது மாவட்ட எம்.எல்.ஏக்களை இன்று மாலை சந்திக்கிறார்  முதல்வர் பழனிசாமி: முற்றுகிறது மோதல்?

சென்னை: அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை இன்று காலை முதல் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சந்தித்து வரும் வேளையில், ஒன்பது மாவட்ட எம்.எல்.ஏக்களை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த தினகரன் நேற்று  பெங்களூரு சிறையில் உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சென்று சந்தித்தார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க  தமிழ்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன், ஜக்கையன், கதிர்காமு, பார்த்திபன், பாலு, தங்கதுரை, ஜெயந்தி மற்றும் இன்பதுரை உள்ளிட்ட பத்து பேரும் சென்றிருக்கின்றனர்.

அதே சமயம் நேற்று முழுவதும் தமிழக அமைச்சர்கள்  முதல்வர் பழனிசாமியுடன் நிகழ்த்திய ஆலோசனைக்கு பிறகு,  அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மாலை அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்பொழுது அதிமுகவிலிருந்து தினகரன் குடும்பத்தார் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்று ஜெயக்குமார் அறிவித்தார்.

ஆனால் தன்னை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று தினகரன் பெங்களூருவில்  கருத்து தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை டி.டி.வி.தினகரனை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன் (செய்யாறு), பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), பாப்புலர் முத்தையா (பரமக்குடி), ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு) ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தொடர்ந்து முன்னாள் அமைசரும் எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜியும் தினகரனை  சந்தித்தார்.  ஒட்டு மொத்தமாக தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களின் எண்னிக்கை 19 ஆக உள்ளது 

இந்நிலையில் ஒன்பது மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி இன்று மாலை 3 மணி அளவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர்,பெரம்பலூர்,  கடலூர் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்கிறார்.  

விரைவில் தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில்,எம்.எல்.ஏக்கள் செயல்பட வேண்டிய விதம் மற்றும் அவர்களது மனநிலை குறித்துமுதல்வர் ஆலோசிப்பார் என்று தெரிகிறது. நாளை தென் மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்களை முதல்வர் சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களின் எண்னிக்கை அதிகரித்துவரும் சூழ்நிலையில், தனது ஆட்சியை காப்பாற்றும் நடவடிக்கைக்களில் முதல்வர் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தெரிகிறது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com