தமிழக அமைச்சர்களின் அறைகளில் இடம் பிடித்த முதல்வர் பழனிசாமி புகைப்படம்: தினகரனுக்கு செக்?

அதிமுகவிலிருந்து தினகரன் குடும்பத்தார் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்ற நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் நேற்றைய அறிவிப்பினைத் தொடர்ந்து, ..
தமிழக அமைச்சர்களின் அறைகளில் இடம் பிடித்த முதல்வர் பழனிசாமி புகைப்படம்: தினகரனுக்கு செக்?

சென்னை: அதிமுகவிலிருந்து தினகரன் குடும்பத்தார் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்ற நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் நேற்றைய அறிவிப்பினைத் தொடர்ந்து, இன்று தலைமை செயலகத்தில் உள்ள தமிழக அமைச்சர்களின் அறைகளில் முதல்வர் பழனிசாமியின் புகைப்படம் இடம்பிடித்துள்ளது.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெரும் முயற்சியில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன், கடந்த சனிக்கிழமையன்று தில்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியானர்.

நேற்று அவர் பெங்களூரு சிறையில் உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சென்று சந்தித்தார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க  தமிழ்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன், ஜக்கையன், கதிர்காமு, பார்த்திபன், பாலு, தங்கதுரை, ஜெயந்தி மற்றும் இன்பதுரை உள்ளிட்ட பத்து பேரும் சென்றிருக்கின்றனர்.

இவர்களுடன் கோவை அதிமுக எம்.பி.நாகராஜ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் வடிவேல் மற்றும் சாமி  ஆகியோரும் உடனிருந்தனர். அத்துடன் மேலும் மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என்றும் தினகரன் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று காலை தலைமைச்  செயலகத்தில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறையில், அமைச்சர்கள் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ராஜலக்ஷ்மி, வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், காமராஜ், செல்லூர் ராஜு, மணிகண்டன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், சரோஜா, சம்பத். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் இடம் பெற்றனர். பின்னர் இவர்களுடன் சுகாதாரத்துறை அமைசச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.  

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த 19 அமைச்சர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த தொடர் ஆலோசனைகளுக்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை நேற்று மாலை சந்தித்தனர்.  அப்பொழுது ஜெயக்குமார் அதிமுகவிலிருந்து தினகரன் குடும்பத்தார் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அறிவித்தார்.

இந்த நிலையில்   முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து  வருகிறார்கள். தற்பொழுது இதில் 11 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்தான் இன்று காலை தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து தமிழக அமைச்சர்களின்  அறைகளிலும், முதல்வர் பழனிசாமியின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரது படங்களுடன், முதல்வர் பழனிசாமி படமும் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது, ஆட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபடலாம் என்று கருதப்படும் தினகரன் ஆதரவாளர்களுக்கு 'செக்' வைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com