தமிழக பேரவை 14-இல் கூடுகிறது

தமிழக சட்டப் பேரவை வரும் 14-ஆம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் விவாதங்களுக்கு எடுக்கப்பட்டு அவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளன.
தமிழக பேரவை 14-இல் கூடுகிறது

தமிழக சட்டப் பேரவை வரும் 14-ஆம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் விவாதங்களுக்கு எடுக்கப்பட்டு அவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளன.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 20-ஆம் தேதி முதல் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று பேரவை மார்ச் 24-இல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முடித்து வைப்பு-மீண்டும் அறிவிப்பு: சட்டப் பேரவை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடரை இறுதி செய்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் முடித்து வைத்தார்.
இந்நிலையில், பேரவையை மீண்டும் கூட்டுவதற்கான அறிவிப்பை ஆளுநர் திங்கள்கிழமை (ஜூன் 5) வெளியிட்டார். இதுகுறித்து, சட்டப் பேரவைச் செயலாளர் (பொறுப்பு) கே.பூபதி வெளியிட்ட ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு:
தமிழக சட்டப் பேரவையை வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும்.
நாளை கூடுகிறது: துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வரும் புதன்கிழமை (ஜூன் 7) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்க பேரவையில் இடம்பெற்றுள்ள ஆளும்கட்சியான அதிமுக, எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடரை 30 முதல் 35 நாள்கள் வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய அறிவிப்புகள்: துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசுவர். இந்த விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பதில் அளிப்பார். இறுதியில் துறை ரீதியான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.
துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறும். அப்படி நிறைவேறும் போது, ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதியைப் பெற பேரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்படும்.
பிரதானப் பிரச்னைகள்: மாட்டிறைச்சி விவகாரம், தமிழகத்தில் நிலவும் வறட்சி, குடிநீர் என பல முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்டவை திட்டமிட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு உரிய பதில்களும் அரசுத் தரப்பில் இருந்து தரப்படும். இதனால், பேரவை கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com