டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: சென்னை பல்கலையில் முதல் பெண் மருத்துவர்

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்த முதல் மாணவி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: சென்னை பல்கலையில் முதல் பெண் மருத்துவர்

சாதனைப் பெண்மணிகள்-5

இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த மகளிர் பலர் உள்ளனர். 
அவர்களை அறிமுகம் செய்யும் தொடர் இது:
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்த முதல் மாணவி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர். சென்னை மாகாண சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர். சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவியை வகித்த முதல் பெண்மணி. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர். சென்னை மாகாண சமூக நல வாரியத்தின் முதல் பெண் தலைவர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என பல "முதல்'களைக் கண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. 

புதுக்கோட்டையில் 30.7.1886-இல் பிறந்த முத்துலட்சுமி, தமிழக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர். பெண்ணுரிமைக்காக போராடியவர்களில் முதன்மையானவர். பெண்களுக்கு ஓட்டுரிமையைப் போராடிப்பெற்றவர். பன்னெடுங் காலமாக இருந்துவந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்குச் சட்டம் இயற்ற வழிவகுத்தவர் என இவரின் சாதனைகள் ஏராளம். 

1917 முதல் இந்திய மாதர் சங்கத்தில் இணைந்து பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். 1926-இல் அகில உலகப் பெண்கள் மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்தபோது 43 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் பெருமையை டாக்டர் முத்துலட்சுமி பெற்றார். அந்த மாநாட்டில், "ஆண்களுக்குச் சமமாக பெண்கள் முன்னேற வேண்டும்; பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும்' என்று முழங்கினார். பின்னர், ஹர்டாக் கமிட்டியின் உறுப்பினராக 1928-இல் லண்டன் சென்று, இந்தியப் பெண்களின் கல்வி நிலைக்காக வாதாடினார். 1930-இல் உப்பு சத்தியாக்கிரகத்தின்போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தன் மேல்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் முத்துலட்சுமி.

1933-இல் அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் பெண்கள் கவுன்சில் மேடையில் இந்தியாவின் குரலை உலகம் அறியச்செய்தார். "ஸ்திரீ தர்மம்' என்ற பெண்கள் மாத இதழின் ஆசிரியராக இருந்தார். பெண்களுக்கு சொத்துரிமை, பால்ய விவாகத் தடை சட்டம், அநாதைக் குழந்தைகள் வாழ்வு மலர அவ்வை இல்லம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கம் என இவரின் சமூகப்பணிகள் அளப்பரியது. இவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் மத்திய அரசு "பத்மபூஷண்' விருதை 1956-இல் இவர் வாழும்போதே வழங்கி கௌரவித்தது. தனிப்பெரும் சாதனைகளின் உறைவிடமாகத் திகழ்ந்த முத்துலட்சுமி, தம் 82-ஆம் வயதில் 22.7.1968-இல் காலமானார்.
-ரவி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com