நீட் தேர்வு: அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வில் (நீட்) அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்வி இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு: அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வில் (நீட்) அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்வி இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மேற்குறிப்பிட்டவாறு சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் மே 7-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) நடைபெற்றது. பல்வேறு மொழிகளில் நடந்த இந்த தேர்வின் வினாத்தாள் ஒரே மாதிரியாக வழங்கப்படாமல், சில மொழிகளில் எளிமையாகவும், சில மொழிகளில் கடினமாகவும் இடம் பெற்றிருந்தன என்ற புகார் எழுந்தது.
இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கான ஒரே அளவீடாக இந்த நீட் தேர்வு அமையாது. எனவே தேர்வை ரத்து செய்தும், தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஜொனிலா, சூர்யா, சித்தார்த், அஜய் சரண் உள்ளிட்ட 9 மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ சென்னை மண்டல அதிகாரி மகேஷ் டி. தர்மாதிகாரி செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்தார்.
அதன் விவரம்: நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் மொழி வாரியாக வெவ்வேறு விதமாக இருப்பதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறு. குஜராத்தி மொழியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையானதாக அமைந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிகள் இல்லை. மொழி வாரியாக வினாக்கள் மாறுபட்டிருக்கலாம், ஆனால், தேர்வின் கடினத் தன்மையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
நீட் தேர்வின் நோக்கமானது ஒரே விதமான நுழைவுத் தேர்வை கடைபிடிப்பதே தவிர, ஒரே மாதிரியான வினாத்தாள்களைப் பின்பற்றுவது அல்ல. குஜராத்தி, ஒரியா, பெங்காலி, மராத்தி, அசாமி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய 8 மொழிகளிலும் தலா 4 நிபுணர்கள் வீதம் 32 நிபுணர்களைக் கொண்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன. எளிமை, சராசரி, கடினம் என்ற அடிப்படையில் வினாக்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் 92.75 சதவீதம் பேரும், பிற 8 மொழிகளில் 9.25 சதவீதம் பேரும் தேர்வு எழுதியுள்ளனர். தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்துள்ள இடைக்கால தடையால் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை தாமதமாகிறது. எனவே, தேர்வு எழுதிய மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தடையை நீக்கி, தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழகம் எதிர்ப்பு

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை தமிழக அரசு கொள்கை அளவில் எதிர்க்கிறது என்று தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வழக்கில் தமிழக அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை அவர் தாக்கல் செய்த பதில் மனு:
நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோதே, இது மாநில அரசின் உரிமையில் தலையிடும் செயல் என்று தமிழக அரசு எதிர்த்து வந்தது. 2013-இல் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்தது. இது தொடர்பாக சீராய்வு மனு ஏதும் தாக்கல் செய்யக்கூடாது என்று மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தமிழக அரசு முறையிட்டிருந்தது. அதையும் மீறி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நீட் தேர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 98 சதவீதம் பேர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கின்றனர். சிபிஎஸ்இ-க்கும், மாநில பாடத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. மாநில பாடத்திட்டத்தை பின்பற்றியதன் மூலம் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேரும் கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 50 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை அனுமதித்தால் அது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமையும். நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கு மொழி வாரியாக வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசிடம் சிபிஎஸ்இ கருத்துக்களைக் கேட்கவில்லை. ஆகவே பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com