டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு: தமிழகத்துக்கு 730 கோடி ரூபாய் வருவாய் இழப்பு

நெடுஞ்சாலையோர மதுபானக் கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 2 மாதங்கள் ஆன நிலையில் தமிழகத்துக்கு ரூ.730 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு: தமிழகத்துக்கு 730 கோடி ரூபாய் வருவாய் இழப்பு


சென்னை: நெடுஞ்சாலையோர மதுபானக் கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 2 மாதங்கள் ஆன நிலையில் தமிழகத்துக்கு ரூ.730 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் கடந்த 2 மாதங்களில் 15% அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்கக் கூடாது என்று கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தமிழகத்தில் இயங்கி வந்த 5,700 டாஸ்மாக் கடைகளில் சுமார் 3,300 கடைகள் மூடப்பட்டன.

டாஸ்மாக் மூலமாக அரசின் ஆண்டு வருமானம் ரூ.29 ஆயிரம் கோடி. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஏராளமான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் 15% வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மூத்த அரசு அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றி அமைக்க பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவது பிரச்னையை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இந்த கடைகள் மூடப்பட்டிருந்தால் வருவாய் இழப்பு ரூ.4,350 கோடி அளவுக்கு உயரும் அபாயமும் உள்ளது.

அரசின் வருவாயைப் பெருக்கும் துறைகளில் டாஸ்மாக் 3வது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி வேகம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பது பெருத்த பின்னடைவை ஏற்படுத்துகிறது.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்புக்குப் பிறகு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில், டாஸ்மாக் வருவாய் ரூ.100 கோடி அளவுக்கு சரிந்தது. அதன்பிறகு, அரசின் கொள்கை முடிவுக்காக தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால், பிப்ரவரி மாதத்தில் இருந்து டாஸ்மாக் வருவாயில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com