தமிழகத்தின் தேவைக்காக கூடுதல் மணல் குவாரிகள்

தமிழகத்தின் தேவைக்காக அடுத்த சில நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி அளிக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் (இடமிருந்து)  எம்எல்ஏக்கள் பா. ஆறுமுகம், இ.ஏ. ரத்தினசபாபதி, வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, அமைச்
விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி அளிக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் (இடமிருந்து) எம்எல்ஏக்கள் பா. ஆறுமுகம், இ.ஏ. ரத்தினசபாபதி, வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, அமைச்

தமிழகத்தின் தேவைக்காக அடுத்த சில நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்று ரூ. 231 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்து அவர் மேலும் பேசியது:
பொதுப்பணித் துறை மூலம் மணல் குவாரிகளை இயக்கி பொதுமக்களுக்குத் தடையின்றி எளிதாக மணல் கிடைக்கும் வகையில் தமிழக அரசால் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. தற்போது செயல்படும் 28 மணல் குவாரிகளிலிருந்து தினசரி சுமார் 5 ஆயிரம் லோடு மணல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் கூடுதல் மணல் குவாரிகளைத் திறந்து தங்கு தடையின்றி மணல் விநியோகிக்கப்படும். மணல் குவாரியில் 2 யூனிட் மணல் ரூ. 1050 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. யாரேனும் கூடுதல் விலைக்கு மணல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை 192 பணிகள், 13.20 கோடியில் நடைபெறுகின்றன. அதன் விளைவாக வருகிற பருவமழையில், நீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டு மக்களின் தேவை பூர்த்தியாகும் என நம்புகிறேன். மாவட்டத்தில் குடுமியான்மலையில் ரூ. 50 கோடியில் வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதில் 174 பேர் பயில்கிறார்கள்.
ரூ. 617 கோடியில் 3,517 குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. விரைவில் பணி முடிவுற்று 10 லட்சம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
வறட்சியிலிருந்து மக்களைப் பாதுகாப்பதையே தலையாயக் கடமையாகக் கொண்டு அரசு உழைத்து வருகிறது. அதிகமாக பேசாதீர்கள், அதிகமாகச் செயல்படுங்கள் எனக் கூறிச் சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் பாதையில் நாங்கள் பயணித்து வருகிறோம். கனிவையும் கண்டிப்பையும் இரு கண்களாகக் கொண்டவர் ஜெயலலிதா. தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் மனதார ஏற்றுக் கொள்வார்கள். அதைப்போல நாங்களும் நடந்து கொள்வோம் என்றார் முதல்வர்.
பின்னர் பல்வேறு துறை சார்பில் 3,513 பயனாளிகளுக்கு ரூ. 13 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் .
மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், ஆர்.பி. உதயக்குமார், செல்லூர் ராஜு, எம்.ஆர். விஜயபாஸ்கர், கடம்பூர்ராஜு, வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, சரோஜா, சேவூர் ராமச்சந்திரன் உள்பட அனைத்துத் துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி ப. குமார், ராமநாதபுரம் எ. அன்வர்ராஜா, சிவகங்கை பி.ஆர். செந்தில்நாதன், எம்எல்ஏக்கள் அறந்தாங்கி இ.எ. ரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை பா. ஆறுமுகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com