பிளாஸ்டிக் அரிசி பற்றிய கவலை வேண்டாம்: அறிந்து கொள்ள வழிகள் உண்டு

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக பல்வேறு மாநிலங்களில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
பிளாஸ்டிக் அரிசி பற்றிய கவலை வேண்டாம்: அறிந்து கொள்ள வழிகள் உண்டு

சென்னை: பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.

தமிழக உணவு பாதுகாப்பு அலுவலர்களும் பல்வேறு மாவட்டங்களில் நேரடி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். கடைகள், கேன்டீன்கள், உணவு விடுதிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நேரடி ஆய்வில் ஈடுபட்டு பல தரப்பட்ட அரிசிகளையும் சோதனை நடத்தினர்.

ஆனால், இதுவரை நடந்த ஆய்வில், பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுவரை பிளாஸ்டிக் அரிசி விற்பனை என்பது வெறும் புரளியாகவே உள்ளது.

பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை செய்வது எப்படி, பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் கோஸ் என பல உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கில் செய்யும் வழிமுறைகள் பல மாதங்களாக வாட்ஸ்-அப்களில் பரவி வந்தது.

இதெல்லாம் வெளிநாட்டில் தானே என்றிருந்த நிலையில், தற்போது இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் என்று செய்திகள் வெளியாகி வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், பிளாஸ்டிக் அரிசியைக் கண்டறிவது எப்படி என்பது குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர். நாகப்பட்டினத்தில் அரிசி விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வியாழக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனர்.

பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்துள்ளதாக பரவிய தகவலையடுத்து, நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.வி. ரவி உத்தரவின் பேரில் நாகை நகராட்சிக்குபட்ட பெரிய கடைத்தெரு பகுதியில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன், அரிசி விற்பனைக்கடைகளில் ஆய்வு செய்தார். பிளஸ்டிக் அரிசி விற்பனைக்கு இருப்பது உறுதிபடுத்தப்படவில்லை. எனினும் உணவு பகுப்பாய்வுக்கு அரிசி அனுப்பப்பட்டது. ஆய்வின்போது நாகை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆர். மஹாராஜன் உடனிருந்தார்.

பிளாஸ்டிக் அரிசியை கண்டறிவது எப்படி?

பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் பிளாஸ்டிக் அரிசியை கண்டறியும் வழிகள் குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கூறியது:

ஒரு டம்ளர் தண்ணீரில் டேபிள் ஸ்பூன் அளவு அரிசியை இட்டு கலக்கினால், நல்ல அரிசி நீரின் அடியில் தங்கும், பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் மிதக்கும். இதேபோல் லைட்டர் மூலம் அரிசியை எரிக்கும்போது, பிளாஸ்டிக் வாசனை வந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம்.

அரிசியின் மீது கொதிக்கும் நிலையில் உள்ள சூடான எண்ணெயின் சில துளிகளை இட்டால், பிளாஸ்டிக்காக இருந்தால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளும். இதேபோல் பல்வேறு வழிகளில் பிளாஸ்டிக் அரிசியை கண்டறியலாம்.

நாகை நகராட்சிக்குட்பட்ட நாகப்பட்டினம், நாகூர், வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு மற்றும் தெற்கு பால்பண்ணைச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக சந்தேகம் வந்தால், நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

பிளாஸ்டிக் அரிசி விற்பது உறுதி செய்யப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது மட்டும் அல்லாமல், அரிசியை கிரைண்டரில் அரைக்கும் போது அது வெண்மையாக இருக்கும். இதுவே பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

நாம் வாங்கிய அரிசி பிளாஸ்டிக் அரிசியா என்ற சந்தேகம் எழுந்தால் அதனை கீழ்வரும் முறையிலும் பரிசோதித்துப் பார்க்கலாம்.

அதாவது, நன்கு காய்ந்த எண்ணெயில் கொஞ்சம் அரிசியை எடுத்துப் போட்டால் உண்மையான அரிசி என்றால் அது பொறியும். பிளாஸ்டிக் என்றால் பொரியாது. பாத்திரத்தில் ஒட்டிக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கடலூரில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? என உணவுப் பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.


கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ந.தட்சிணாமூர்த்தி தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் த.நந்தகுமார், பெ.நல்லதம்பி, க.சுப்பிரமணியன் ஆகியோர் கடலூரில் உள்ள அரிசி ஆலை, அரிசி விற்பனைக் கடைகளில் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக ந.தட்சிணாமூர்த்தி கூறியது:

ஆய்வில் பிளாஸ்டிக் அரிசி பயன்பாட்டுக்கான எந்த முகாந்திரமும் கிடைக்கவில்லை. நாம் பயன்படுத்தும் அரிசி உண்மையான அரிசியா? என்பதை 3 எளிய வழிகளில் கண்டறியலாம்.

கண்ணாடி தம்ளரில் தண்ணீர் நிரப்பி அதில் அரிசியை இட்டால் நல்ல அரிசி கீழே தங்கும். பிளாஸ்டிக் என்றால் மிதக்கும்.

பொதுவாக அரிசியை எரித்தால் அது பொரிந்து கருகும் தன்மை கொண்டதாக இருக்கும். பிளாஸ்டிக் என்றால் அது எரிவதோடு, நாற்றமும் வீசும்.

மேலும், சூடான எண்ணெய்யில் அரிசியைப் போட்டால் அது போட்டவுடன் பாத்திரத்தின் அடியில் தங்கும். பிளாஸ்டிக் என்றால் அது பிசின் போல உருகி, கூழ் போல மாறி விடும். எனவே, பொதுமக்கள் இந்த எளிய வழிகளைக் கையாண்டு போலியான அரிசியை தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழகத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டம் அமலில் உள்ளதால், பணம் கொடுத்து அரிசி வாங்க வேண்டிய நிலையும் குறைவாகவே உள்ளது.

மேலும், பிளாஸ்டிக் மூலப் பொருள் அதிக விலை கொண்டதாக இருப்பதால், பிளாஸ்டிக் அரிசியை தயாரித்து விற்பது லாபகரமற்றதாகவே இருக்கும் என்றனர்.

கட்செவி அஞ்சலில் புகார் தெரிவிக்கலாம்

பொதுமக்கள் உணவுப் பொருள்களின் தரம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண் கொண்ட கட்செவி அஞ்சலுக்கு (வாட்ஸ்-அப்) அனுப்பலாம். இந்தப் புகார் சென்னையில் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com