58ஆம் ஆண்டாகத் தள்ளிப்போகும் மேட்டூர் அணை திறப்பு: குறுவையிலும் வருவாய் இழக்கும் அச்சம்

மேட்டூர் அணை திறப்பு 58 ஆம் ஆண்டாகத் தள்ளிப்போவதால் குறுவை சாகுபடியில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதியில் தரிசாகக் கிடக்கும் வயல்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதியில் தரிசாகக் கிடக்கும் வயல்.

மேட்டூர் அணை திறப்பு 58 ஆம் ஆண்டாகத் தள்ளிப்போவதால் குறுவை சாகுபடியில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டும். இந்த அணை கட்டப்பட்டு 1934 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. ஆனால், கர்நாடகத்திலிருந்து தண்ணீர் உரிய காலத்தில் கிடைக்காததால், 83 ஆண்டுகளில் இதுவரை 25 முறை மட்டுமே ஜூன் 12-ம் தேதி அல்லது அதற்கு முந்தைய தேதிகளில் திறக்கப்பட்டது. இப்போது, 58ஆம் ஆண்டாக மேட்டூர் அணை திறப்புத் தேதி தள்ளிப்போகிறது. குறிப்பாக, தொடர்ந்து ஆறாம் ஆண்டாக நிகழாண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தத் தேதியில் அணை திறக்கப்பட்டால், டெல்டா பகுதியில் உள்ள தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை பருவத்தில் ஏறத்தாழ 1.10 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும். ஆனால், மேட்டூர் அணை திறப்புத் தள்ளிப்போனால் குறுவைப் பருவத்தில் இயல்பான அளவில் கிட்டத்தட்ட 50 சத அளவில்தான் நெல் சாகுபடி செய்ய இயலும்.
கடந்த 6 ஆண்டுகளாக பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிட்டனர். இந்நிலையில், கடந்தாண்டு காவிரி நீர் வரத்து இல்லாததுடன், பருவமழையும் பொய்த்ததால் குறுவை மட்டுமல்லாமல், சம்பா சாகுபடியிலும் பேரிழப்பு ஏற்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
எனவே, நிகழாண்டு நிலத்தடி நீராதாரம் உள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இயல்பான பரப்பளவான 40,000 ஹெக்டேரில் இதுவரை 11,400 ஹெக்டேரில்தான் பயிரிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20,000 ஹெக்டேர் வரை சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது என வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல, நாகை மாவட்டத்தில் இயல்பான பரப்பளவான 35,000 ஹெக்டேரில் இதுவரை 20,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டாலும், மேலும் 5,000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய வாய்ப்பிருக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இயல்பான பரப்பளவான 36,000 ஹெக்டேரில் இதுவரை 3,000 ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 15,000 ஹெக்டேர் வரை எதிர்பார்க்கப்படுகிறது என வேளாண் துறையினர் தெரிவித்தனர். எனவே, டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு 60,000 ஹெக்டேர் வரைதான் சாகுபடி செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
நெல் பயிரில் சராசரியாக ஹெக்டேருக்கு ரூ. 1 லட்சம் வருவாய் கிடைக்கும். டெல்டாவில் குறுவை பருவத்தில் 1.10 லட்சம் ஹெக்டேரில் சாகுபடியாகும் நெல் பயிர் மூலம் விவசாயிகள் ரூ. 1,100 கோடி வருவாய் ஈட்டுவர். இதை நிகழாண்டும் குறுவைப் பருவத்தில் இழக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற நிலை கடந்த 6 ஆண்டுகளாகவே உள்ளது.
கடந்தாண்டு சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டதால் 4.80 லட்சம் ஹெக்டேரில் 90 சதம் மகசூல் இழப்பு ஏற்பட்டது. எனவே, சுமார் ரூ. 4,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் ஓராண்டில் ஏறக்குறைய ரூ. 4,000 கோடி வருவாயை இழந்துள்ளனர் என்றார் விமல்நாதன்.
மண் வளம் பாதிப்பு: வெப்பநிலை தொடர்ந்து அதிகமாக இருப்பதால், மண் வளம் பாதிக்கப்படுகிறது. கடும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பூமிக்கடியில் உள்ள அமிலம் மற்றும் காரத்தன்மை ஆவியாகி மண்ணின் மேற்பரப்பில் படர்கிறது. அதனால் மண்ணில் அமில, காரத்தன்மை அதிகமாகி நுண்சத்துகள் குறைந்து வருகின்றன.
எனவே, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் அதிகத் தண்ணீர் தேவைப்படும் குறுவை சாகுபடியைச் செய்தாலும் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும் என்ற அச்சமும் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com