வாட்ஸ்-அப்களில் வருவது எல்லாமே உண்மையான தகவல்கள் இல்லை: ஓர் உதாரணம்

தனியாக கார் அல்லது ஆட்டோவில் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையின் புதிய சேவை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது.
வாட்ஸ்-அப்களில் வருவது எல்லாமே உண்மையான தகவல்கள் இல்லை: ஓர் உதாரணம்


சென்னை: தனியாக கார் அல்லது ஆட்டோவில் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையின் புதிய சேவை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த தகவலில், தமிழகத்தில் ஒரு பெண் டேக்சி அல்லது ஆட்டோவில் தனியாக பயணம் செய்ய வேண்டி இருந்தால், வாகனத்தில் ஏறும் போது அந்த வாகனத்தின் எண்ணை குறிப்பிட்ட இந்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்துவிட்டால் அந்த வாகனம் ஜிபிஆர்எஸ் மூலம் சென்னை மாநகர காவல்துறையினரால் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"Before boarding a taxi or auto, SMS the vehicle number to this number: 9969777888. You will get an acknowledgement via SMS and the vehicle will be tracked by GPRS,” the message reads.

இது முழுக்க முழுக்க பல தவறுகளைக் கொண்ட ஒரு செய்தி. முதலில், இந்த செல்போன் எண்ணுக்கு யார் எஸ்எம்எஸ் செய்தாலும் அவர்களுக்கு ஒப்புதல் எஸ்எம்எஸ் வராது. பதிலாக இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்றுதான் தகவல் வரும்.

இரண்டாவது, ஜிபிஆர்எஸ் மூலம் வாகனம் கண்காணிக்கப்படும் என்பது. ஜிபிஆர்எஸ் என்பது ஜெனரல் பாக்கெட ரேடியோ சர்வீஸ் என்பதன் சுருக்கம். இது வெறும் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம். ஒரு வேளை இந்த தகவலை பதிவு செய்தவர் ஜிபிஎஸ் அல்லது குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் என்பதற்கு பதிலாக ஜிபிஆர்எஸ் என்று பதிவிட்டிருக்கலாம்.

ஜிபிஎஸ் மூலமாக ஒருவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய முடியும். 

அடுத்ததாக, அந்த எண் செயல்பாட்டில் இல்லை என்பது மட்டும் அல்லாமல், இதுபோன்ற ஒரு வசதியை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தவே இல்லை என்பதுதான் மிக முக்கியமான தகவல்.

காவல்துறை தரப்பில், கேப் நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் 'அவசரகால அழைப்பு' வசதியை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், பயணிகளுக்கு அதுபற்றி தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அதனை கேப் நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, இனி சமூக வலைத்தளங்களில் பொதுத் தகவல் என்று வெளியாகும் அனைத்தையும் ஃபார்வர்டு செய்யாமல், அவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முற்படுவதுதான் இளைய சமுதாயத்தின் கட்டாய கடமையாகும்.

பிறருக்கு நன்மை செய்வதாக, கண்ணை மூடிக் கொண்டு இதுபோன்ற தகவல்களை பரப்புவது படித்த சமுதாயத்துக்கு அழகல்ல.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com