சட்டப்பேரவை கூடியது: சிரிப்பலையை ஏற்படுத்திய தெர்மகோல் கோஷம்

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.
சட்டப்பேரவை கூடியது: சிரிப்பலையை ஏற்படுத்திய தெர்மகோல் கோஷம்


சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.

அவை துவங்கியதும் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பி உள்ளிட்ட 7 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த கூட்டத் தொடரின் போது, பேரவையில் கடும் அமளி ஏற்பட்டதால், இன்றைய கூட்டத் தொடரின் போது பேரவையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூவத்தூர் விவகாரம், குதிரை பேரம் உள்ளிட்ட விவகாரங்களை பேரவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளான இன்று கேள்வி நேரத்துக்குப் பிறகு வனம், சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், பதிலுரையும் இடம்பெறுகிறது.

பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், திமுக எம்எல்ஏக்கள் பின்னணியில் 'தெர்மகோல் தெர்மகோல்' என கோஷம் எழுப்பியதால் திமுக எம்எல்ஏக்கள் உட்பட பலரும் சிரித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை உருவானது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவை கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பேரவையை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இந்த நிலையில், பேரவையை மீண்டும் வரும் 14 -ஆம் தேதி கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். அதன்படி, சட்டப்பேரவை இன்று கூடியுள்ளது.

துறைரீதியான விவாதங்கள்: சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியதும், கேள்வி நேரம் நடைபெறும். கேள்வி நேரத்துக்குப் பிறகு நேரமில்லாத நேரத்தில் பல முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வறட்சி, மாட்டிறைச்சி விவகாரம் ஆகியன குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்களை பிரதான எதிர்க்கட்சியான திமுக, பேரவைச் செயலகத்திடம் அளித்துள்ளது. இதனால், இந்தப் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் பேரவையில் எழுப்பும்போது, அதுகுறித்து ஆளும் தரப்பினர் உரிய பதில்களை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பர்.

இதைத்தொடர்ந்து, வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் பதில்களை அளித்து துறை வாரியான புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

படிப்படியான அறிவிப்புகள்: இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, உயர்கல்வி ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை (ஜூன் 15) விவாதம் நடைபெறுகிறது. இந்தத் துறைகளின் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 40 -க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை அந்தத் துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிடுவார் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் பின், வெள்ளிக்கிழமை (ஜூன் 16) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், அதற்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.காமராஜ் ஆகியோர் பதிலும் அளிக்க உள்ளனர். ஜூலை 19-ஆம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com