பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப் பேரவை புதன்கிழமை (ஜூன் 14) கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடர் வரும் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறும்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப் பேரவை புதன்கிழமை (ஜூன் 14) கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடர் வரும் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறும்.
இக்கூட்டத் தொடரில் 'நேரமில்லாத நேரத்தில்' பல முக்கியப் பிரச்னைகளை குறிப்பாக, மாட்டிறைச்சி விவகாரம், வறட்சி பாதிப்பு, நீட் தேர்வு உள்ளிட்ட விஷயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பான முடிவுகள் செவ்வாய்க்கிழமை தனித்தனியாக நடைபெற்ற அந்தக் கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
அமைச்சரவைக் கூட்டம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4.40 மணிக்குத் தொடங்கி 5.30 மணி வரை நடைபெற்றது.
ஜூலை மாதம் முதல் சரக்கு - சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த மசோதா குறித்து செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில் திட்டங்கள் தொடர்பான வெள்ளை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ரியல் எஸ்டேட் சட்டம்: அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்த வகை செய்திடும் ரியல் எஸ்டேட் மசோதாவும் பேரவையில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இந்த மசோதா தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பேரவையை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை: அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, பேரவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது, ஆளும்கட்சியின் செயல்பாடுகளை எப்படி அமைத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசித்தார்.
இக் கூட்டம் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி மாலை 6.20 மணி வரை நீடித்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மதுரையில் இந்த மாத இறுதியில் கொண்டாடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
முதல் நாள் வனம்-சுற்றுச்சூழல்: இந்தப் பேரவைக் கூட்டத்தொடரில், கேள்வி நேரம், நேரமில்லாத நேரத்துக்குப் பிறகு துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. முதல் நாளான புதன்கிழமை (ஜூன் 14) வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.
இந்த விவாதங்களில் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றுப் பேசுகின்றனர். சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களான திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
வியாழக்கிழமை பள்ளி, உயர்கல்வித் துறைகளும், வெள்ளிக்கிழமை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், வாக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.
புதன்கிழமை தொடங்கும் பேரவை கூட்டத் தொடர் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: சட்டப் பேரவையில் எப்படிச் செயல்படுவது என்பது தொடர்பாக, திமுக, காங்கிரஸ், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.,க்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தின.
முக்கியப் பிரச்னைகளைத் தினமும் எழுப்பி ஆளும்கட்சியின் கவனத்தை ஈர்க்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முழுமையாகப் பங்கேற்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் போது, மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதங்களில் பங்கேற்க அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு வாய்ப்புகள் கிடைப்பது சாத்தியமில்லாதது. இதனை அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்தவர்கள் வழங்க வேண்டும்.
அப்படி வாய்ப்புகள் வழங்கப்படாதபட்சத்தில், எதிர்க்கட்சிகளின் தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் கேள்வி நேரத்தில் மட்டும் பங்கேற்றுவிட்டு அதன்பிறகு வெளியேறி விடலாமா என்பது குறித்தும் அந்த அணியினர் ஆலோசித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com