எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது. இது தொடர்பாக ஒரே குழப்பமாக உள்ளது. அதிமுக உறுப்பினர்களே இங்கு அமையாவிட்டால் பதவியை ராஜிநாமா செய்வோம் என்றெல்லாம் கூறுகிறார்கள் என்றார்.
அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில்:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. வளர்ச்சியடையாத மாநிலங்களில் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் கொள்கை. வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் இருப்பதால் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வருவதில் சிக்கல் இருந்தது. ஆனால், ஜெயலலிதா எடுத்த முயற்சியின் காரணமாக தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் தேவை. அந்த இடமும் விமானம் நிலையம், ரயில் நிலையம் அருகில் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிகள் உள்ளன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக செங்கல்பட்டு, பெருந்துறை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் என 5 இடங்கள் கண்டறியப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக் குழு வந்து பார்வையிட்டது.
இதில் செங்கல்பட்டிலும், பெருந்துறையிலும் நிலம் போதவில்லை. மூன்று பகுதி நிலங்களாக உள்ளன என்பதுபோன்ற காரணங்களைக் கூறினர்.
மற்ற இடங்களில் நிலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசு இடத்தைத் தேர்வு செய்ததும் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்படியாவது அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திமுக உறுப்பினர் பொன்முடி எழுப்பிப் பேசியது:
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை அமைச்சர் இன்னும் தேர்வு செய்யவில்லை எனக் கூறினார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் தஞ்சாவூரில் மருத்துவமனை அமைக்க வேண்டும் எழுதியுள்ளார் என்றார்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது:
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு என தேர்வு செய்யப்பட்ட 5 இடங்களையும் மத்தியத் தேர்வு குழுவினர் ஒவ்வொரு குறையாகக் கூறினர். தஞ்சாவூரில் அமைக்கப்படும் என எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இறுதி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்றார்.
அதன் பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது:
எய்ம்ஸ் மருத்துவமனை அவரவர் மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் உறுப்பினர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு 5 இடங்களைக் குறிப்பிட்டு, தமிழக அரசால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மத்திய அரசும் தமிழகத்துக்கு வந்து, அனைத்து இடங்களையும் பார்வையிட்டு சென்றது.
ஆனால், ஒவ்வொரு இடத்துக்கும் ஏதோ ஒரு குறை கூறினர். எனினும், தஞ்சாவூரில் செங்கிப்பட்டி என்ற இடத்தில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சரியாக இருக்கும் என்ற ஒரு கருத்தை கூறினர். அதனால், விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வரவேண்டும் என்ற அடிப்படையில்தான் குறிப்பிட்டோம்.
ஆனால், மத்திய அரசு அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் அவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏதாவது ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆராய்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே குறிப்பிட்ட 5 இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com