பயிர்க் கடன் தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு ஏன்?: அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது
பயிர்க் கடன் தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு ஏன்?: அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது ஏன் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார்.
கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை பேசியது: சிறு, குறு விவசாயிகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனை எதிர்த்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். எனவே, உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டை உடனே தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் விவசாயிகளின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றார்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ குறுக்கிட்டுக் கூறியது: அய்யாக்கண்ணு போன்றோர் போராட்டம் நடத்தியது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.
5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கும் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம்.
அரசு திட்டம் வகுத்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதில், நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்புக் கூற முடியாது. இது மாநில அரசின் உரிமையைப் பறிப்பது போலாகும். அதனை எதிர்த்துத்தான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். விவசாயிகளின் நண்பன் அதிமுக அரசுதான். இந்தியாவிலேயே வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம்தான் என்றார்.
மு.க.ஸ்டாலின் (திமுக): நடுத்தர விவசாயிகளின் பயிர்க் கடனான ரூ.5,780 கோடியைத் தள்ளுபடி செய்துள்ளீர்கள் என்பதை மறுக்கவில்லை. வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடமிருந்து ரூ.33,000 கோடி கேட்டுள்ளீர்கள். ஆனால், மத்திய அரசு ரூ.1,712 கோடி மட்டும் அளித்துள்ளது. இந்த நிலையில் நீங்கள் இன்னும் தள்ளுபடி செய்ய வேண்டிய தொகை ரூ.1,980 கோடி மட்டும்தான். அதையும் தள்ளுபடி செய்தால் விவசாயிகள் பயன்பெறுவர். மேலும் விவசாயிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதையும் திரும்பப் பெற வேண்டும். இதற்கு 'டென்ஷனாக' இல்லாமல் 'கூலாக'ப் பதில் கூறவும்.
அமைச்சர் செல்லூர் ராஜூ: 'டென்ஷன்' ஆகவில்லை. அரசின் நிர்வாக முடிவில் நீதிமன்றம் தலையிடுவது சரியில்லை என்பதற்காகத்தான் மேல்முறையீடு செய்துள்ளோம்.
துரைமுருகன் (திமுக): நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து எப்படிப் பேச முடியும்?
செல்லூர் ராஜூ: வழக்கு ஏன் தொடரப்பட்டுள்ளது என்பதைத்தான் விளக்குகிறேன். ஆந்திரம், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்துவிட்டதாக உறுப்பினர் கூறினார். ஆனால், அந்த மாநிலங்களில் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணைகூட இன்னும் போடப்படவில்லை என்பதுதான் உண்மை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com