புதுச்சேரி : நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ரூ. 10 லட்சம் கட்டணம்: உயர் நீதிமன்றம்

புதுச்சேரியில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களிடம்

புதுச்சேரியில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களிடம்
ரூ.10 லட்சம் கட்டணமாக வசூலித்து, வரும் 19 -ஆம் தேதி மாலைக்குள் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5.5 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்காததால், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
எனவே, இக்கல்லூரிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அதுவரை அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கூடுதல் கட்டணம் தொடர்பாக மனுதாரரின் எழுப்பிய குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. ஆகையால், நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் கட்டணமாக வசூலித்து, ஜூன் 19 -ஆம் தேதி மாலைக்குள் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும். 20 -ஆம் தேதி முதல் மாணவர்களை வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
மேலும் நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ முதுநிலை படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஆகியவை மையப்படுத்தப்பட்ட சேர்க்கை குழுவை (centralized Admission Committee)  அமைக்க வேண்டும்.
இந்தக் குழு நிர்ணயிக்கும் கட்டணம், மாணவர்கள் முதலாம் ஆண்டுக்கு செலுத்தும் ரூ.10 லட்சத்துக்கு குறைவாக இருக்கும்பட்சத்தில், மீதமுள்ள தொகையை மாணவர்கள் திரும்ப பெறுவதற்கு தகுதியுடையவர்கள். அதேபோல், அதிக கட்டணத்தை குழு நிர்ணயித்தால், கூடுதல் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும்.
இந்த உத்தரவு குறித்து, புதுச்சேரி மாநில அரசும், மையப்படுத்தப்பட்ட சேர்க்கை குழுவும் ஊடகங்கள், பத்திரிகைகளில் விரிவான விளம்பரம் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com