என்.எல்.சி. சுரங்கத்தில் நிலக்கரி எரிப்பு: சிபிஐ விசாரணைக்கு சிஐடியு வலியுறுத்தல்

என்.எல்.சி. சுரங்கத்தில் நிலக்கரி எரிந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

என்.எல்.சி. சுரங்கத்தில் நிலக்கரி எரிந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: என்.எல்.சி. சுரங்கத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி கடந்த ஒருவாரகாலமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தற்செயலான விபத்தாகக் கருதிவிட முடியாது.
மின் உற்பத்திக்கு தேவைக்கும் அதிகமாக, பழுப்பு நிலக்கரியை வெட்டிக் குவித்து மேல்மண் நீக்க பணிகளை ஒப்பந்ததாரர்களிடம் விடப்பட்டதால்தான் அதிகமான உற்பத்தி எனப் பறைசாற்றியது நிர்வாகம். மீண்டும் நிலக்கரியை வெட்டியெடுக்க வேண்டுமானால் குவித்து வைத்துள்ள பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்த வாய்ப்பில்லாதபோது வேண்டுமென்றே மீண்டும் ஒப்பந்தம் விடுவதற்கு ஏதுவாக சேமிப்பு பழுப்பு நிலக்கரி எரியவிடப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் இதே போன்று ஒருபகுதி நிலக்கரிச் சுரங்கம் எரிந்துள்ளது. சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டிய பின்பும் என்எல்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளவில்லை. பழுப்பு நிலக்கரி எரியாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அதைச் செய்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள பெரும் இழப்பைத் தவிர்த்திருக்க முடியும்.
இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு, தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com