மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நாளை மேல்முறையீடு

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு திங்கள்கிழமை (ஜூன் 19) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு திங்கள்கிழமை (ஜூன் 19) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவதற்கான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் புதிய தகுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, 3 நாள்களுக்குள் கலந்தாய்வை நடத்தவும் உத்தரவிட்டது. இதனால் ஏற்கெனவே நடத்தப்பட்ட முதுநிலை மாணவர் சேர்க்கை ரத்தானது.
முதுநிலை மாணவர் சேர்க்கையில் 95 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு இடம் கிடைத்துள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசு மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
மேல்முறையீடு: இந்த நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு தீர்மானித்தது.
இதுதொடர்பாக சுகாதாரத்த துறை அதிகாரிகள் கூறுகையில், 'உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, முதுநிலை மாணவர் சேர்க்கையை ரத்து செய்த உத்தரவுக்கு தடை பெறுவோம். தமிழக அரசு தரப்பில் வலுவான கருத்துகளும், வாதங்களும் உள்ளதால் தடையை எளிதாகப் பெறுவோம் என நம்புகிறோம். இதற்காக துறையைச் சார்ந்த அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் தில்லி விரைந்துள்ளனர்' என்று தெரிவித்தனர்.
அரசு மருத்துவர்களும் வழக்கு: தமிழக அரசுடன் இணைந்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களும், சிறு சிறு குழுக்களாக இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். மேலும் தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்கத்தின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிரந்தரத் தீர்வு: 'சென்னை உயர் நீதிமன்றம் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை பெறுவதற்கு தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. அவ்வாறு தடை பெற்றாலும், அது தாற்காலிகத் தீர்வாகதான் இருக்கும். இதற்கு நிரந்தரத் தீர்வு காண அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கும் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும்' என அரசு மருத்துவர்கள் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கைக்கு, அரசு தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புதிய தகுதிப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, முதுநிலை மருத்துவ மாணவர்களின் நீட் மதிப்பெண் உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில் புதிய தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்ய உள்ளது. அதில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கிடைக்காதபட்சத்தில், புதிய பட்டியலை உடனே வெளியிடும் வகையில் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com