இரட்டை இலைச் சின்னம் விரைவில் கிடைக்கும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலைச் சின்னம் விரைவில் கிடைக்கும் என அக்கட்சியின் பொருளாளரும்,
இரட்டை இலைச் சின்னம் விரைவில் கிடைக்கும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலைச் சின்னம் விரைவில் கிடைக்கும் என அக்கட்சியின் பொருளாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மதுரையில் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ள இவ்விழா குறித்து அதிமுக அம்மா அணி மதுரை புறநகர் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சுற்றுச்சாலை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
மதுரையில்தான் எம்.ஜி.ஆர். செங்கோலை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கி அரசியலுக்கு அடித்தளமிட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட காலியிடம், அதைத்தொடர்ந்து கட்சிக்கு எதிராக நடந்த சதிவேலைகள் ஆகியவற்றை கடந்துவந்துள்ளோம்.
தேர்தல் ஆணையத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் பனிரெண்டு லட்சம் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இரட்டை இலைச் சின்னம் அதிமுக அம்மா அணிக்கே கிடைக்கும் என செய்திகள் வந்துள்ளன. சத்தியம், தர்மம் வென்றுள்ளது இதன்மூலம் தெளிவாகிறது என்றார்.
கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியது: அதிமுக அரசு ஏழை எளியவர்களின் அரசாகும். அதிமுக அரசின் வலிமையைக் காட்டும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்படும்.
அதிமுகவை எந்தச் சக்தியாலும் அழிக்கமுடியாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா கட்சியைக் காப்பாற்றும். சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சி மற்றும் பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போதும் உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபித்துள்ளோம். அதிமுக எந்தத் தேர்தலையும் சந்தித்து வெற்றிபெறும் ஆற்றலுடையது என்றார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் விழா ஆலோசனை உரையாற்றினர். அமைச்சர்கள் கே.பி.அன்பழகன் (உயர்கல்வித்துறை), காமராஜ் (உணவுத்துறை), ஓ.எஸ்.மணியன் (கைத்தறி), பாஸ்கரன் (காதி கிராமத்தொழில்) மற்றும் மக்களவை உறுப்பினர் உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ், பெரியபுல்லான், நீதிபதி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அம்மா அணிச் செயலர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பெரியார், யானைக்கல் மற்றும் மாட்டுத்தாவணி பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பான பிரசார வாசகம் அடங்கிய பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓ.பி.எஸ்., தினகரன் பங்கேற்கலாம்
கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, அவர் கூறியது:
அதிமுகவில் இரு அணிகளும் இணைவதற்கான நடவடிக்கை தொடர்கிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். விழாவில் அனைவரும் பங்கேற்று எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். விழாவுக்கு தனித்தனியாக அழைப்பு கேட்பது சரியல்ல என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com