குடிநீர்ப் பஞ்சம்: தமிழகத்துக்குச் சவால்!

தண்ணீர் பெறுவது என்பது சவாலாகி வரும் நிலையில், வரும் காலங்களில் நிலத்தடி நீரைப் பெருக்கவும், பாதுகாக்கவும், வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்பும் முயற்சியை உடனடியாகத்
குடிநீர்ப் பஞ்சம்: தமிழகத்துக்குச் சவால்!

நாமக்கல்: தண்ணீர் பெறுவது என்பது சவாலாகி வரும் நிலையில், வரும் காலங்களில் நிலத்தடி நீரைப் பெருக்கவும், பாதுகாக்கவும், வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்பும் முயற்சியை உடனடியாகத் தொடங்குவதுமே இன்னும் கால் நூற்றாண்டு காலத்தில் எதிர்கொள்ளப் போகும் குடிநீர்ப் பஞ்சத்துக்கு தீர்வாக இருக்க முடியும்.
தமிழகத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் இந்த சராசரியை எட்டிப்பிடிப்பதே மிகவும் அதிசயம். கடந்தாண்டு, சராசரியில் பாதிக்கும் குறைவான அளவே மழை பெய்துள்ள நிலையில், அணைகளின் நீர் இருப்பு கவலைக்குரிய வகையில் குறைந்துவிட்டது.
தமிழகத்தில் 365 நாட்களில் சராசரியாக 35 நாட்கள் மட்டும் 923 மி.மீ அளவு மழை பெய்கிறது. நீர்த் தட்டுப்பாடுள்ள இந்திய மாநிலங்களில் தமிழகமும் மிக முக்கிய ஒன்றாகும். அதனால்தான் இங்கு தண்ணீருக்கான மோதல்களும், சண்டைகளும் அடிக்கடி நிகழ்கின்றன.
காவிரியிலிருந்து முல்லைப் பெரியாறு வரை போராடிப் போராடியே தமிழகம் தனக்கான தண்ணீர் உரிமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் ஆந்திரம் 4,000 டி.எம்.சி, கர்நாடகம் 2,000, டி.எம்.சி, கேரளம் 1,000 டி.எம்.சி தண்ணீரை குடிமைப் பயன்பாட்டிற்கன்றி கடலில் கலக்கின்றன.
வேளாண் சாகுபடி தொடர்ந்து குறையும்
குடிநீருக்கே மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், வேளாண்மை குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 1.30 கோடி ஹெக்டேர். இதில் பாதியில் அதாவது ஏறக்குறைய 65 லட்சம் ஹெக்டேர் விவசாயம் நடைபெறுகிறது. அதில் பாதி மானாவாரி விவசாயம். மீதி பாதி பாசன விவசாயம். பாசனத்துக்கு வேண்டிய நீர் மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஆற்றுப் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம். மூன்றும் சம பங்கு பரப்பு நிலங்களுக்கு நீர் வழங்குகின்றன.
கிணற்றுப் பாசனம் மொத்தம் 12 லட்சம் ஹெக்டேருக்கு பாசனம் வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தக் கிணறுகளின் எண்ணிக்கை 18 லட்சம். அதாவது ஒரு கிணறு சராசரியாக 3 ஹெக்டேர் நிலத்தைத்தான் பாசனம் செய்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் கிணறுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர, அவற்றால் பாசனம் பெறும் நிலத்தின் அளவு கூடவில்லை.
பராமரிப்பில்லாத நீர்நிலைகள்
தமிழகத்தில் சுமார் 40,000 நீர்நிலைகள் உள்ளன. இதில் 26,000 நீர்நிலைகள் 100 ஏக்கருக்கும் குறைவான பாசன வசதியைக் கொண்டவை. 14,000 ஏரி, குளங்கள் 100 ஏக்கருக்கும் அதிகமான பாசன வசதியைக் கொண்டவை. பெரும்பாலான நீராதாரங்கள் இப்போது பழைய நிலையில் இல்லை.
இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை அதிகாரி வி.தாமோதரன் கூறியது: பொதுப்பணித் துறையால் கணக்கெடுக்கப்பட்டுள்ள 39,202 ஏரி, குளங்களின் மொத்தக் கொள்ளளவு 390 ஆயிரம் மில்லியன் கன அடி. ஆனால் இங்கு நீர் தேங்குவது வெறும் 248 ஆயிரம் மில்லியன் கன அடி. இதன் மூலம் நீர்த்தேக்கங்களைக் காட்டிலும் நீர்நிலைகளின் பராமரிப்பு தமிழகத்தில் மிகவும் அவசியம் என்றார்.
தண்ணீர் சிக்கனத்தை மக்கள் உணர வேண்டும்
தமிழகத்தின் ஓராண்டு தேவைக்கான நீரின் அளவு 54,395 மில்லியன் கன மீட்டர். இதே அளவுடன் பெருகும் மக்கள்தொகையோடு கணக்கிட்டால் வரும் 2050ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவை 57,725 மில்லியன் கன மீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாகத் தேவைப்படும் 3 மில்லியன் கன மீட்டர் நீருக்கும், பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் தேவைப்படும் நீருக்கும் இனிமேல் தமிழகம் என்ன செய்யப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
தண்ணீர் பயன்பாடு குறித்து தமிழக மக்களுக்கு இன்னமும் அந்தக் கால நினைப்பே உள்ளது. தண்ணீர் சிக்கனம் இனி வருங்காலத்தில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பண்பாக மாற வேண்டும். எரிபொருளுக்கு இணையாக நீரைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், நீராதாரங்களை வாழ்வியலுக்கான அடிப்படை ஆதாரங்களாகப் பார்த்தல் மிகவும் அவசியம்.
அரசு செய்ய வேண்டியது
தமிழகத்தின் நீர்த்தேக்கங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 8 அணைகளில் 30 விழுக்காடும், இரண்டு அணைகளில் 50 விழுக்காடும், 4 அணைகளில் 10 விழுக்காடும் வண்டல் படிந்து நீர்க் கொள்ளளவு குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த வண்டல் மண்ணை எடுப்பதற்கான திட்டத்தை வகுப்பதுடன், அணையின் நீர்க்கொள்ளளவை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்வது அவசியம்.
தமிழகத்தில் ஓடும் அனைத்து ஆறுகளிலும் ஆய்வு மேற்கொண்டு, வாய்ப்புள்ள இடங்களில் சிறிய அளவில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதுபோல், வெள்ளக் காலத்தில் தண்ணீரை ஆற்றின் இரண்டு பக்கமும் குறைந்தது 50 கி.மீ தொலைவு வரை தண்ணீரைக் கொண்டு சென்று ஏரி, குளங்களில் விடுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்புக்கான திட்டத்துக்கு மிகுந்த முனைப்பு காட்டுவது மிகவும் அவசியம். அதற்கு தமிழக அரசு கால வரையறையுடன் கூடிய அறிவிப்பினைச் செய்வது காலத்தின் கட்டாயம்.

* தமிழகத்தில் சுமார் 40,000 நீர்நிலைகள் உள்ளன. இதில் 26,000 நீர்நிலைகள் 100 ஏக்கருக்கும் குறைவான பாசன வசதியைக் கொண்டவை. 14,000 ஏரி, குளங்கள் 100 ஏக்கருக்கும் அதிகமான பாசன வசதியைக் கொண்டவை. பெரும்பாலான நீராதாரங்கள் இப்போது பழைய நிலையில் இல்லை. *

-கே.விஜயபாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com