தமிழகத்துக்கு கிடைக்குமா நவோதயா பள்ளிகள்?

இன்றைய போட்டி உலகில் நீட், ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெற்று விரும்பிய கல்லூரியில் சேர்வதும் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவதும் தமிழக மாணவர்களுக்கு சவாலான
தமிழகத்துக்கு கிடைக்குமா நவோதயா பள்ளிகள்?

கடலூர்: இன்றைய போட்டி உலகில் நீட், ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெற்று விரும்பிய கல்லூரியில் சேர்வதும் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவதும் தமிழக மாணவர்களுக்கு சவாலான விஷயமாகவே உள்ளது. ஆனால், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜவாஹர் நவோதயா வித்யாலயப் பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற தேர்வுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் மிக எளிதாக இடம் கிடைத்து விடுகிறது.
இந்தப் பள்ளியின் பெயர் தமிழக மக்களிடம் அவ்வளவு பிரபலம் இல்லையென்றாலும், கல்வியாளர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானதே. இந்தப் பள்ளிகளை மத்திய அரசு தனது செலவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்கி அதனை நடத்துவதற்கான நிதியையும் ஒதுக்கி வருகிறது. இந்தக் கல்வி நிறுவனத்தில் பிராந்திய மொழியும், ஆங்கிலமும் பயிற்சி மொழியாகவும், இந்தி மூன்றாவது மொழியாகவும் உள்ளன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்புகளில் அந்தந்த பிராந்திய, ஆங்கில மொழியில் மட்டுமே பாடம் நடத்தப்படுகிறது.
இந்தப் பள்ளியைத் தொடங்குவதற்கு மத்திய அரசுக்கு மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 25 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். பள்ளி கட்டுமானம், உபகரணத்துக்காக மத்திய அரசு ரூ.25 கோடி நிதி வழங்குகிறது. வகுப்புக்கு 2 பிரிவுகள் வீதம் தலா 40 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகிறார்கள்.
இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கையானது நுழைவுத் தேர்வு மூலமாக நடைபெறும். பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு 75 சதவீதமும், நகர்ப்புற மாணவர்களுக்கு 25 சதமும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
உண்டு உறைவிடப் பள்ளியாகச் செயல்படும் இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, புத்தகம், நோட்டு, தரமான உணவு, காலை, மாலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.
ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை மத்திய அரசு செலவிடுகிறது.
பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு 6 மாதங்கள் தங்கியிருந்து அந்த மாநில மக்களின் மொழி, கலாசாரம் குறித்து அறிவதற்காக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதேபோல, மற்ற மாநிலங்களிலிருந்தும் தமிழகத்துக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்தப் பள்ளியானது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டிருந்தால் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 24 ஆயிரம் பேர் தமிழ் மொழியைக் கற்றிருப்பார்கள். அதே எண்ணிக்கையிலான தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பிற மொழியைக் கற்கும் நிலை உருவாகியிருக்கும். ஆனால், தமிழகத்தில் இந்த நிலை தடுக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஜவாஹர் நவோதயா வித்யாலயப் பணியாளர் சங்கச் செயலரும், தெலங்கானா மாநிலத்திலுள்ள இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருபவருமான க.கமலபாதம் கூறியதாவது:
இந்தப் பள்ளி தமிழகத்துக்கு வந்தால் புதையல் கிடைத்தது போலாகும். கேந்திரிய வித்யாலயப் பள்ளி போல இல்லாமல் அந்தந்த பிராந்திய மொழிகளே பயிற்சி மொழியாக இருப்பது இந்தப் பள்ளியின் கூடுதல் சிறப்பாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 350 பேர் பல்வேறு மாநிலங்களில் இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், துணை, உதவி இயக்குநர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். அடித்தட்டு மக்களுக்கு உயர்ந்த கல்வி, தரமான உணவு, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் இந்தப் பள்ளியில் கிடைக்கிறது. இது அடித்தட்டு மாணவர்களை கண்டிப்பாக அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும்.
எனவே, இந்தப் பள்ளிகளை தமிழகத்தில் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களது சங்கத்தின் நோக்கமாகும். இதற்காக விடுமுறை நாளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு சங்கங்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளி என்ற விகிதத்திலும், தலித் மாணவர்கள் அதிகமுள்ள மாவட்டம் என்றால் கூடுதலாக ஒரு பள்ளியும் திறக்கப்படலாம். அவ்வாறு பள்ளி செயல்பட்டால் அந்தப் பள்ளியே மாவட்டத்தின் மாதிரிப் பள்ளியாக விளங்கும். இந்தப் பள்ளியில் உள்ள தரமான ஆய்வகங்களை மற்ற அரசுப் பள்ளி மாணவர்களும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். மற்ற ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படும்.
எனவே, ஜவாஹர் நவோதயா வித்யாலயப் பள்ளிகள் மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கும் பள்ளியாகச் செயல்படும். இவ்வாறு சிறப்பம்சம் கொண்ட இந்தப் பள்ளிகள் 30 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடங்கப்படாததும், அதற்கான முன்னெடுப்புகள் இல்லாததும் ஏன்? என்ற கேள்வியே நம்முன் நிற்கிறது என்றார் அவர்.

-ச.முத்துக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com