தள்ளிப்போகும் பருவமழை: தாமதமாகும் அணை திறப்பு; தவிப்பில் விவசாயிகள்

குமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமாகப் பெய்யாமலும், அணைகள் திறக்கப்படாமலும் உள்ளதால்,

குமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமாகப் பெய்யாமலும், அணைகள் திறக்கப்படாமலும் உள்ளதால், கன்னிப்பூ பருவத்தில் நடவு செய்ய முடியாமலும், நடவு செய்த பயிர்களை காப்பாற்ற முடியாமலும் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ஜூன் 11ஆம் தேதி கன்னிப்பூ பாசனத்துக்காக அணைகள் திறக்கப்பட்டன. அப்போது அணைகளில் நீர்மட்டம் பேச்சிப்பாறை 37.25 அடியாகவும், பெருஞ்சாணி  70.25 அடியாகவும், சிற்றாறு-1 12.04 அடியாகவும், சிற்றாறு-2 12.13 அடியாகவும், பொய்கை 17.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு முழுக்கொள்ளளவான 54.12 அடியாகவும் இருந்தன.

நிகழாண்டில் ஜூன் மாதத்துக்கு முன்பாகவே அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இருப்பு இல்லாமல் இருந்ததாலும், ஜூன் மாதம் தொடங்கி பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழை தற்போதுவரை தீவிரமாகப் பெய்யாததாலும் பாசனத்துக்காக அணைகள் திறக்கப்பட வேண்டிய நேரத்தில் இயல்பாக இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு தண்ணீர் கூட அணைகளில் இல்லாமல் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையில் 13.55 அடியும், பெருஞ்சாணி அணையில் 29.35 அடியும், சிற்றாறு 1 அணையில் 2.0 அடியும், சிற்றாறு 2 அணையில் 2.10 அடியும், பொய்கை அணையில் 0.50 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 22.97 அடியும் நீர்மட்டம் இருந்தது.

அணைகள் திறக்கப்பட வேண்டிய நேரத்தில் திறக்கப்படாததாலும், மழை பெய்யாததாலும் நிகழ்பருவமான கும்பப்பூ பருவத்தில் உழவு செய்து  நாற்றுக்களை பாவியுள்ள விவசாயிகளும், பொடி விதைப்பின் மூலம் நடவு செய்துள்ள விவசாயிகளும், உழவு மட்டுமே செய்து விட்டு நடவுக்காக காத்திருக்கும் விவசாயிகளும் கடும் தவிப்பிலும், பதற்றத்திலும் உள்ளனர். 

இதுகுறித்து முன்னோடி விவசாயி செண்பகசேகர பிள்ளை கூறியது: மாவட்டத்தில் குளத்துப் பாசன பகுதிகளில் விவசாயிகள் பொடி விதைப்பு மூலம் நடவு செய்துள்ளனர். பல இடங்களில் நாற்றுக்களை பாவிட்டு அணை தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இல்லாமல் அணைகள் திறக்கப்படாத நிலை உள்ளது. இதனால் நாற்றுகள் கருகத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டும் இரண்டாம் பருவத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான விவசாயிகள் வைக்கோலை மட்டுமே அறுவடை செய்தனர். ஆனி மாதம் பிறந்த பின்பும் மழை பெய்யாமல் கடும் வெயில் அடிக்கிறது. மாவட்டத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் விவசாயத்தை சார்ந்தே இருக்கிறது என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன் கூறியது: தோவாளை, அகஸ்தீசுவரம், ராஜாக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் பொடி விதைப்பு மூலம் இதுவரை 250 ஹெக்டேர் பரப்பில் நடவு செய்துள்ளனர். இது போன்று சுமார் 50 ஹெக்டேர் பரப்பில் நாற்றுக்களை பாவியுள்ளனர்.

அணைகளில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் இருந்தால்தான் பாசனத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும். தற்போது அணைகளில் தண்ணீர் இருப்பு மிக்குறைவாக உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com