மக்களின் மனநிலையை படம் பிடித்து காட்டுவதே திரைப்படத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்: இயக்குநர் ராஜூமுருகன்

அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மக்களின் மனநிலை என்ன என்பதை சுட்டிக்காட்டுவதே திரைப்படத்தின் நோக்கமாக இருக்கவேண்டும் என்றார் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன்.
மக்களின் மனநிலையை படம் பிடித்து காட்டுவதே திரைப்படத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்: இயக்குநர் ராஜூமுருகன்

அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மக்களின் மனநிலை என்ன என்பதை சுட்டிக்காட்டுவதே திரைப்படத்தின் நோக்கமாக இருக்கவேண்டும் என்றார் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மன்னார்குடி கிளை சார்பில், கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி, பந்தலடியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பாராட்டு அரங்கில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் மேலும் பேசியது:
தோழர், காம்ரேட் போன்ற சொற்கள் திரைப்படங்களில் தாராளமாக பயன்படுத்தலாம் என்ற நிலையை தான்எடுத்த ஜோக்கர் திரைப்படம் தந்துள்ளது. தேசிய, திராவிட அரசியல் மாயை ஒழிந்து, மதவாத, ஜாதி ஆதிக்கத்தை எதிர்க்க அரசியல் அதிகாரம் இடதுசாரிகளிடம் வரவேண்டும் என்றார்.

இதேபோல், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பு.தா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, உரையரங்கில் கலந்துகொண்டு பேசும்போது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தில், உலக அளவில் புரட்டி போடும் பாடத் திட்டம் உள்ளது என்பது திட்டமிட்டு பரப்பப்படும் சதியாகும். எந்த கல்விக் குழுவும் நீட் தேர்வு முறையை அங்கீகரிக்கவில்லை. கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமை பறிப்புக்கு எதிராக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் கிளைத் தலைவர் சரஸ்வதிதாயுமானவன் தலைமை வகித்தார். ஜோக்கர் திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ராஜூ முருகனை பாராட்டி, முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைச் செயலர் கவிஞர் களப்பிரான், கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலர் முனைவர் இரா. காமராசு ஆகியோர் பேசினர்.

சமூக ஆர்வலர் ஐ.வி. நாகராஜன் எழுதிய "படிப்பு வட்டம்' என்ற நூலை, மாவட்டப் பொருளாளர் மா. சண்முகம் வெளியிட, அசோகா சிசுவிஹார் மெட்ரிக் பள்ளி தாளாளர் எம்.ஜி. வெங்கட்ராஜன் பெற்றுக்கொண்டார். விழாவில், நாட்டுப்புற இசைநிகழ்ச்சி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்டத் தலைவர் கு. தேவரெத்தினம், மாவட்டச் செயலர் இரா. தாமோதரன், எஸ்பிஏ மெட்ரிக் பள்ளி தாளாளர் ப.ரமேஷ், பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி தாளாளர் கி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com