பாஜக கட்டளைப்படி தமிழகத்தை அதிமுக ஆள்கிறது: ஆர்.நல்லகண்ணு குற்றச்சாட்டு
By DIN | Published on : 20th June 2017 02:36 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு.
தமிழகத்தை பாஜக கட்டளையின்படி அதிமுக ஆள்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு குற்றம் சாட்டினார்.
கும்மிடிப்பூண்டியில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜக ஆட்சி 3 ஆண்டுகளைக் கடந்து விட்டது. அதற்கான சாதனை குறித்து மத்திய அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் எந்த சாதனையும் இல்லை. வேதனை தான் உள்ளது.
தமிழகத்தின் உரிமை மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சி பல கூறுகளாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி பாஜக தலைவர்கள்தான் தற்போது தமிழகத்தை வழி நடத்துகின்றனர் என்கிற வேதனையான நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பாஜகவின் தலைமை உள்ளதா அல்லது அதிமுக-வின் ஆட்சி உள்ளதா என்பது அனைவரின் கேள்வியாக உள்ள நிலையில், பாஜக கட்டளையின் படி இங்கு அதிமுக ஆட்சி நடத்துகிறது.
இந்தியாவில் 6 லட்சம் கோடி வாராக் கடன்களை பெரு முதலாளிகளுக்கு மத்திய அரசின் ஆதரவில் வங்கிகள் ரத்து செய்துள்ளன. ஆனால் தமிழகத்தில் வறட்சியால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலும், இங்கு விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படவில்லை. விவசாயக் கடன் ரத்தை ரிசர்வ் வங்கி நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எதிர்ப்பதாக கூறுகிறது. ஆனால் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு ரத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை, காவிரி நதி நீர் ஆணையம் செயல்படாமல் இருப்பது போன்றவற்றை தெளிவாக மத்திய அரசிடம் வலியுறுத்தியும், அழுத்தம் கொடுத்தும் நிறைவேற்றிக் கொள்ள தமிழக அரசுக்கு தைரியம் இல்லை. அந்தளவுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு உள்ளது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.கண்ணன், கும்மிடிப்பூண்டி ஒன்றியச் செயலாளர் அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.