ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: வழக்குப் பதிந்து விசாரணை: முதல்வர் பழனிசாமி அரசின் பதிலுக்கு திமுக எதிர்ப்பு-வெளிநடப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த திமுக
பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த திமுக

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
முதல்வரின் இந்தப் பதிலுக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பேரவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்புச் செய்தனர். இதுகுறித்து பேரவையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான அறிக்கையை தலைமைச் செயலாளருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்து வழக்குப் போட அறிவுறுத்தியது. முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்கைப் பதிவு செய்ய உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தப் பிரச்னை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் பி.தனபால்: நீங்கள் (திமுக) எழுப்பிய பிரச்னை குறித்து முழுமையாகப் பேச அனுமதியில்லை. தகவல் கோருவது என்கிற அடிப்படையிலேயே பிரச்னையை எழுப்ப அனுமதி அளித்துள்ளேன். கவன ஈர்ப்பு, சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. முக்கியப் பிரச்னை என்பதால் தகவல் கோருகிற அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
(பேரவைத் தலைவரின் இந்தக் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.)
பேரவைத் தலைவர் தனபால்: நீங்கள் (திமுக) சொல்வது போன்று பேரவையை நடத்த முடியாது. என்னை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனாலும், இந்தப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசாமல், மேலெழுந்தவாரியாக கருத்துகளைப் பதிவு செய்ய அனுமதி தருகிறேன்.
மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை கடந்த ஏப்ரல் 9-இல் ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த ரத்துக்கு முன்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் அடிப்படையில் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமென தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் தனபால்: தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்ட கேள்விகளில் மனுதாரர்தான் சிலருடைய பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கச் சொல்லவில்லை.
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்): தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள தகவல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை பேரவைக்குத் தெரிவிக்க வேண்டும்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: எம்.பி. வைரக்கண்ணன் என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணைய அறிக்கையில், வருமான வரித் துறை சோதனையின் போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஏதுவாக புகார் மனு அளித்திட வலியுறுத்துகிறது. அதன்படி, பெருநகர் குற்றவியல் நடுவரிடம் அனுமதி பெற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
மு.க.ஸ்டாலின்: இந்தப் பிரச்னை பற்றி ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, வழக்கு குறித்து எந்தத் தகவலும் வரவில்லை என்றார். இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார். முதல்வரின் பதில் முறையாக, திருப்தியாக இல்லை.
(முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.)
முதல்வர் பழனிசாமி: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக திமுக மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 12 வழக்குகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டவை என்று விளக்கம் அளித்தார்.
4 ஆண்டுகளுக்கு அரசு தொடரும்: முதல்வர் பழனிசாமி
திமுக நினைப்பது போன்று, எதுவும் நடக்காது. அதிமுக அரசு நான்கு ஆண்டுக்காலம் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் திமுக திங்கள்கிழமை எழுப்பிய பிரச்னைக்குப் பதிலளித்து அவர் பேசியது: திமுகவினர் தினந்தோறும் சட்டப் பேரவைக்கு வருவதும் ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்புவதும் அதில் ஏதாவது கிடைக்குமா என்றும் எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக எதுவும் கிடைக்காது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு நான்கு ஆண்டுகளுக்கு மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அரசாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com