கடற்படை முகாம் அமைக்க எதிர்ப்பு: நாகையில் 2 கிராம மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

நாகையில் இந்திய கடற்படை முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாகை நம்பியார் நகர், ஆர்யநாட்டுத் தெரு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் திங்கள்கிழமை முதல்

நாகையில் இந்திய கடற்படை முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாகை நம்பியார் நகர், ஆர்யநாட்டுத் தெரு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் திங்கள்கிழமை முதல்வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
நாகை நம்பியார் நகர், ஆர்யநாட்டுத் தெரு ஆகிய 2 மீனவக் கிராமங்களுக்கிடையே இந்திய கடற்படை முகாம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு, 2 கிராம மீனவர்களும்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடற்படை முகாம் அமைக்கப்பட்டால், மீனவர்களுக்கு தொழில்முறை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
அதன் மூலம், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதையொட்டி, கடற்படை முகாம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என 2 கிராம மீனவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, நாகை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கெனவே 3 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை நாகை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய்க் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படவில்லை.
இதையடுத்து, நம்பியார் நகர், ஆர்யநாட்டுத் தெரு ஆகிய 2 மீனவக் கிராம மீனவர்களும் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் எனவும், செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரைச்சந்தித்து கோரிக்கை மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் 2 கிராம மீனவப் பஞ்சாயத்தாரும் தெரிவித்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சியருடனான சந்திப்புக்குப் பின்னர் தங்களின் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து செவ்வாய்க்கிழமை முடிவெடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com